மிச்சிகன் நாட்டில் அனைத்து உறுப்புகளையும் தனித்தனியே பெற்று, கல்லீரலை பகிர்ந்து கொண்டு ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
பிறந்த ஓராண்டு ஆகும் இந்த இரட்டைச் சகோதரிகளுக்கு, மிச்சிகன் பல்கலைக்கழக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரித்துள்ளனர். தற்போது இருவரும் நலமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பீட்டர்ஸ்பெர்க்கைச் சேர்ந்த சராபெத் – அமெலியா இர்வின் சகோதரிகள் கல்லீரலை பகிர்ந்து கொண்டு ஒட்டிப் பிறந்தனர். இவர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் சிஎஸ் மோட் குழந்தைகள் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட இந்த அறுவை சிகிச்சை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையில் சிறுமிகள் உயிருக்கு ஆபத்து இருந்த போதும், நம்பிக்கையோடு, அதன் பெற்றோரும், மருத்துவர்களும் இந்த அறுவை சிகிச்சையை நடத்தினர்.
தற்போது இரண்டு குழந்தைகளும் நலம் பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இதுபோன்ற நம்பிக்கை தரும் செய்திகள்தான் மக்களுக்குத் தேவை. அந்த நம்பிக்கை மீதுதான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.