‘வட மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்; கோவை, நீலகிரியில் கன மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகள், புதுச்சேரி ஆகியவற்றில், மிதமான மழை பெய்யும்.
சென்னையில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.இதற்கிடையில், தாய்லாந்தில் நிலவும், ‘நவுல்’ புயல், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, இந்திய கடற்பகுதியான வங்க கடலுக்குள் நுழைகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும்.
இதன் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும், மத்திய, தெற்கு மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் பலத்தக் காற்று வீசும். எனவே, இன்னும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள், அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.சென்னையில் மழைநேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இடைவிடாமல் மழை பெய்தது.
சென்னை நகரில், பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி, ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், புழல், பூண்டி, 9 செ.மீ., மழை பெய்துள்ளது. அண்ணா பல்கலை, மாம்பலம், பொன்னேரி, சென்னை விமான நிலையம், 8; ஆலந்துார், பெரம்பூர், தரமணி, செம்பரம்பாக்கம், சோழவரம், கும்மிடிப்பூண்டி, 7; நுங்கம்பாக்கம், திருத்தணி, தாம்பரம், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.