தயாரிப்புக்கூடத்தில் இருந்து 50 ஆயிரம் லிட்டர் மது வீணாய் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள வில்லாமாலியா என்ற பகுதியில் மது தயாரிப்புக்கூடம் ஒன்று உள்ளது. அங்கு தயாரிக்கப்பட்ட மதுவை ராட்சத குழாய்களுக்குள் நிரப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், திடீரென அந்த ராட்சத குழாய் உடைந்து 50 ஆயிரம் லிட்டர் மது வீணாக கொட்டியுள்ளது. அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மது அங்கிருந்து வழிவதை தடுக்க முடியாத நிலையில் இருந்த ஊழியர்கள் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவை இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
49 நொடிகளே இருக்கும் அந்த வீடியோவில், வெள்ளம் போல மது பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவ்வளவு மது வீணாக வழிவதை தடுக்கமுடியவில்லையே என சிலர் ஆதங்கம் தெரிவித்திருந்த நிலையில், பலர் அந்த நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய இழப்பீடு என குறிப்பிட்டிருந்தனர்.
அந்த நிறுவனம் 1969ம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவருகிறது எனவும் இவ்வளவு ஆண்டுகளில் இதுபோன்று நிகழ்ந்ததில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. “எங்கள் ஒயின் ஆலை ஐபீரிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் உள்ள வில்லாமாலியாவில், ஜெகார் மற்றும் கேப்ரியல் நதிகளின் பள்ளத்தாக்குகளுக்கு இடையில் ஒரு அழகான பகுதியில், மஞ்சுவேலாவின் தோற்றம் என்ற பெயரில் அமைந்துள்ளது.” என அந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SUCESOS | Reventón de un depósito de vino de unos 50.000 litros en Bodegas VITIVINOS, de Villamalea pic.twitter.com/lU5pIzZAjU
— Radio Albacete (@RadioAlbacete) September 25, 2020