தமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் 17,073 மின்திருட்டு, 2019-20ம் ஆண்டில் 12,330 மின்திருட்டு என மொத்தமாக 29,403 மின்திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 121.65 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்திருட்டுக்கள் பரவலாக நடக்கிறது. இதனால் மின்சாரவாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதைக்கட்டுப்படுத்தும் விதமாக மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக மின் திருட்டை தடுக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் 21 அமலாக்கக் குழுக்கள் மற்றும் ஒரு பறக்கும்படை அமைத்துள்ளது. மேலும் மின்வாரியம் சார்பில் புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னள் ராணுவ வீரர்களைக் கொண்ட குழுவும் மின்திருட்டுக்களை கண்டுபிடித்து வருகிறது.
தற்ேபாது 43 முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட குழுக்கள் உள்ளன. இதன்மூலம் மின்பகிர்மான வட்டங்களில் அவ்வப்போது மின்இணைப்புகள் அதிரடியாக ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது மின்திருட்டுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2018-19ம் ஆண்டில் மொத்தமாக 17,073 மின்திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோல் 2019-20ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையில் 12,330 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 29,403 மின்திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து இழப்பீடு, சமரசத்தொகையினை அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.