திருமண நாளில் மணமகளுக்கு கொரோனா… கவச உடை யில் தாலி கட்டிய மணமகன்

திருமண நாளில் மணமகளுக்கு கொரோனா பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவச உடை அணிந்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் தவிரத் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியும் கவச உடை அணிந்திருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஓரளவு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,981 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,96,729 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,109 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று 391 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,573 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நாளில் மணமகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதால் மணமக்கள் ,  பூசாரி ஆகியோர் கவச உடையணிந்து திருமணத்தை நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஷஹாபாத் மாவட்டம். நேற்று இப்பகுதியிலுள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இருவீட்டாரும் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். திருமணத்தை முன்னிட்டு நண்பர்களும், உறவினர்களும் மண்டபத்தில் குவியத் தொடங்கினர். இந்நிலையில் மணமகளுக்கு கொரோனா நோய் அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தாலி கட்டுவதற்கு ஒருசில மணிநேரம் முன்புதான் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதால் திருமணத்தை ரத்து செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.

இதையடுத்து சுகாதாரத் துறையினரின் அறிவுரையின் படி திருமணத்தை அங்குள்ள கொரோனா மையத்தில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மணமக்களும், பூசாரியும் கவச உடை அணிந்து திருமணத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து மணமக்கள் உட்பட 3 பேரும் கவச உடை அணிந்தனர். தாலி கட்டிய பின்னர் மணமகள் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வேறு வழியில்லாமல் மணமகன் மட்டும் சோக முகத்துடன் தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சிகிச்சை முடிந்த பின்னரே மணமகளால் வீட்டுக்குச் செல்ல முடியும். வீட்டுக்குச் சென்ற பின்னரும் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here