வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இங்கு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது, ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக சரணாலயத்துக்கு வரும். ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யும்.
பறவைகள் குஞ்சுகளுடன் மீண்டும் தாய்நாடு திரும்புவது வழக்கமாக உள்ளது. பறவைகளைk கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வர்.

இந்நிலையில், வேடந்தாங்கல் மற்றும் சுற்றுப்புறத்தில் போதிய மழையில்லாததால் சரணாலய ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டதால், பறவைகள் வரத்தும் குறைந்தது. புரெவி புயல் காரணமாக வேடந்தாங்கல், வெள்ளப்புத்தூர் உள்ளிட்ட நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரி, இரண்டே நாட்களில் முழு கொள்ளளவையும் எட்டியது. ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் மீண்டும் சரணாலயத்துக்கு திரும்பிவருகின்றன.

அவை, மரக்கிளைகளில் கூடுகட்ட தொடங்கியுள்ளதால் பறவைகள் சீசன் தொடங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, வேடந்தாங்கல் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சரணாலய ஏரி 16 அடி முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. பறவைகளும் அதிக அளவில் சரணாலயத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

தற்போது, காலை நேரங்களில் 10 ஆயிரம், மாலையில் 14 ஆயிரம் வரை பறவைகளைக் காண முடிகிறது. கொரோனா அச்சம் உள்ளதால், அரசு அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு சரணாலயம் திறக்கப்படும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here