காபூல்-
ஆப்கானிஸ்தான் நாடு பூமியில் பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது என பொருளாதாரம் , அமைதி அமைப்பு வெளியிட்டுள்ள தனது வருடாந்திர உலக பயங்கரவாத குறியீடு பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டில் உலகில் நடந்த கடுமையான 20 பயங்கரவாத தாக்குதல்களில் 6 அந்நாட்டில் நடந்துள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், அந்நாட்டின் காபூல் நகரில் பி.டி.15. என்ற இடத்தில் காந்தம் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். இதனை காபூல் நகர போலீசார் டுவிட்டரில் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதேபோல், ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம், கிவாஜா ராவாஷ் பகுதி, பி.டி.9 என்ற இடத்தில் உள்ள ஹவாஷினாசி, ஜன் அபாத் ஆகிய பகுதிகள் உள்பட காபூல் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.