கைலாசாவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து விமானச் சேவை: நித்யானந்தா அறிவிப்பு

கைலாசாவுக்கு வர விரும்புவோர், ஆஸ்திரேலியா வந்து, அங்கிருந்து விசா பெற்று சிறப்பு விமானச் சேவை மூலம் வரலாம் என்று நித்யானந்தா அறிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரான நித்யானந்தா, தனது கைலாசா நாட்டுக்கு வரும் வழி, விசா பெறும் முறைகளை விடியோவாக வெளியிட்டுள்ளார்.

தெற்கு அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியான ஈக்குவேடாரின் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதனை கைலாசா நாடு என்று அறிவித்திருக்கிறார் நித்யானந்தா.

தற்போது, தனது நாட்டுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என்ற விமான சேவையை தொடங்கியிருப்பதாகவும், உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் ஆஸ்திரேலியா வந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கைலாசா நாட்டுக்கு வரலாம் என்று விடியோ ஒன்றில் அறிவித்துள்ளார்.

ஈகுவேடார் அரசிடம் இருந்து இந்த தீவை விலைக்கு வாங்க, தனது பல கோடீஸ்வர பக்தர்கள் உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைலாசாவுக்கு வருவோருக்கு மூன்று நாள்கள் மட்டுமே தங்க அனுமதி உண்டு, மூன்று நாள்களுக்கு மேல் தங்யிருக்க வேண்டுமென்றால் தனியாக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இங்கு வந்து தங்குவோருக்கு இலவச உணவு,  தங்கும் வசதி எற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பிடரி ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்தல், பாலியல் புகார், கொலை வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவானார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர்மாதம், ஈக்குவேடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதற்கு பிரதமராக தன்னையே பிரகடனமும் செய்து கொண்டார். தினந்தோறும் காணொலியில் வந்து அவரது பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வருகிறார்.

கைலாசா நாட்டுக்கு என தனி கடவுச்சீட்டு, ரிசர்வ் வங்கி, பணம் என பலவற்றையும் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here