லண்டன்-
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்பெற்று மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பி ஓடினார்.
இது ஒருபுறம் இருக்க, அவரது கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு வழங்கிய கடன்களை வசூலிக்க அவர் மீது லண்டன் ஐகோர்ட்டில் திவால் வழக்கை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு பதிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் 13 வங்கிகளின் ஒருங்கிணைந்த இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை லண்டன் தலைமை திவால் கோர்ட்டில் நீதிபதி மிக்கேல் பிரிக்ஸ் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நிபுணத்துவ சாட்சிகளாக இரு தரப்பிலும் இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஜராகினர்.
அதேநேரம் இரு தரப்பிலும் வக்கீலாக ஆஜரானவர்கள் பிரபல பாரிஸ்டர்கள் ஆவர். அந்த வகையில் வங்கிகள் சார்பில் பிரபல பாரிஸ்டர் மெர்சியா சேகர்டிமியானும், மல்லையா சார்பில் பாரிஸ்டர் பிலிப் மார்ஷலும் ஆஜராகினர்.
இதில் மல்லையாவுக்காக காணொலி காட்சி மூலம் ஆஜரான ஓய்வு பெற்ற நீதிபதி தீபக் வர்மாவிடம் மெர்சியா நடத்திய குறுக்கு விசாரணையில், ‘மல்லையாவின் இந்திய சொத்துகள் மீதான வங்கிகளின் பாதுகாப்பை விட்டுக்கொடுக்க முடியாது’ என கூறினார்.
அதேநேரம் ஓய்வுபெற்ற நீதிபதி கோபால கவுடாவிடம் பிலிப் மார்ஷல் நடத்திய குறுக்கு விசாரணையின்போது, வங்கிகளின் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கும் உரிமை இருப்பதாக கூறினார்.
இதனால், இந்த விசாரணையின்போது இரு தரப்பு வக்கீல்கள் மட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. எனவே நீதிபதிகள், இருவரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. பின்னர் இந்த விசாரணை தொடர்ந்து நடந்தது.
முன்னதாக வங்கிகள் சார்பில் ஆஜரான பாரிஸ்டர் மெர்சியா தனது வாதத்தில், ‘ஒரு வணிக நிறுவனமாக, ஒரு வங்கி தனது பாதுகாப்புக்காக தனது வர்த்தக ஞானத்தை பயன்படுத்த உரிமை உண்டு’ என கூறினார்.