கேரளத்தைச் சேர்ந்த தாமஸ், லீலாம்மா தம்பதியின் மகள் அபயா (21). கன்னியாஸ்திரீயான அவர், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டில் தங்கி, அதே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கான்வென்ட் கிணற்றில் அவர் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீஸாரும், பின்னர் குற்றப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினர். இதில் அபயா தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் முடிவுக்கு வந்தனர்.
ஆனால் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த வழக்கை பின்னர் சிபிஐ விசாரித்தது. இது தற்கொலையல்ல, அபயா கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தபோதிலும், தகுந்த சாட்சியங்கள் இல்லாததாலும், குற்றவாளிகளைக் காணவில்லையென கூறியும் மூன்று முறை விசாரணை நடத்தி முடித்துவைக்கும் அறிக்கையை அளித்தது.
செல்வாக்குள்ள முக்கிய குற்றவாளிகளை சிபிஐ காப்பாற்ற எண்ணுவதாக, 2008-இல் கேரள உயர்நீதிமன்றம் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, நடைபெற்ற தீவிர விசாரணையில், பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ருக்கயில், கன்னியாஸ்திரீ செபி ஆகிய மூவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த மூவரும் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அவர்களின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் அபயாவுக்குத் தெரிய வந்ததால், அவர் கோடரியின் கைப்பிடியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கியது. இந்த வழக்கில் பாதிரியார் பூத்ருக்கயில் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஜெ.சனல்குமார் தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
கேரளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த அபயாவின் பெற்றோரும் கடந்த 2016-இல் அடுத்தடுத்து காலமாகிவிட்டனர்.