அலங்காநல்லூரில் வரும் 16- ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கும் மாடு பிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களைப் பந்தாடி நின்று விளையாடும் காளைகளுக்கும் கார், பைக், டி.வி., ப்ரிட்ஜ், பீரோ உள்ளிட்ட மெகா பரிசுகள் காத்திருக்கின்றன.
மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், உலக நாடுகளில் இருந்தும் வருவார்கள். அதேபோல் காளை களும் உள்ளூரில் இருந்து மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து அழைத்து வருவார்கள்.
அதனால், காளைகளின் ஆக்ரோஷத்தையும், அதன் சீறிப் பாயும் தன்மையையும் மாடு பிடி வீரர்கள் எளிதாகக் கணிக்க முடியாது. அதனால் ஒவ்வொரு காளையையும் வாடிவாசலில் அவிழ்த்து விடும்போதும் போட்டி சுவாரசியமாகவும், விறுவிறுப் பாகவும் இருக்கும்.
சில காளைகள் மிரட்சியடைந்து ஓட்டம் பிடிக்கும். ஆனால், பல காளைகள் வாடிவாசலில் நின்று விளையாடும். மாடு பிடி வீரர்களை ஓட வைக்கவும் செய்யும்.
இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 16-ம் தேதி நடக்கிறது. இதை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை பெரிய அளவில் பரிசுகள் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா தொற்றால் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடந்தாலும், போட்டியின் நேரம் குறைக்கப்பட்டாலும் 500 வகை யான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வணிக ரீதியாக தனியார் நிறுவனங்கள் இப் போட்டிக்கு ஸ்பான்சர் செய்யத் தொடங்கியுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளைக்கும், அது வாடிவாசலில் பிடிபடுகிறதோ இல்லையோ, அதற்கு நிச்சயப் பரிசுகள் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன் வாடிவாசலில் வைத்தே வழங்கப்படுகிறது. சிறந்த காளைக்கும், மாடு பிடி வீரருக்கும் கடந்த ஆண்டுகளைப் போல் கார் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுகளை முதல் வர், துணை முதல்வர் சார்பில் உள்ளூர் அதிமுகவினர் வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது.
இது தவிர அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றியத் தலை வர்கள், ஊராட்சித் தலை வர்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள் என ஆயிரக் கணக்கானோர் பரிசுகள் வழங்கி உள்ளனர்.
போட்டியில் சமூக இடை வெளியைக் கடைப்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவிலான பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது. எனவே அலங்காநல்லூரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சைஸ் எல்இடி டி.வி.கள் வைக்கப் படுகின்றன.
போட்டியைத் தொடங்கி வைக்க வரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்து பார்வையிடுவதற்காகச் சிறப்புக் கேலரி வாடிவாசல் அருகே அமைக்கப்படுகிறது.
சிறப்பாக விளையாடும் காளைக்கு கடந்த ஆண்டைப் போலவே விலை உயர்ந்த நாட்டினப் பசு மாடு வழங்கப்பட உள்ளது.