பார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது

ஆக்ரா :
தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், 76 சதவீதம் குறைந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்று என்பதால், சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகை தருவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டினர். கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு, உலகின் பல்வேறு பகுதிகளும் ஊரடங்கால் முடங்கியது.
சர்வதேச விமானங்களும் பல மாதங்கள் நிறுத்தப்பட்டன. இது, நம் நாட்டிற்கான சுற்றுலா பயணியரின் வருகையை வெகுவாக குறைத்தது. நாட்டின் ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச், 17 முதல் செப்., 21 வரை தாஜ்மஹால் மூடப்பட்டிருந்தது. இதனால், தாஜ்மஹாலுக்கான சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும் நிலையில், கடந்த ஆண்டு, 76 சதவீதம் குறைந்துள்ளது.
இதன்படி, 2019 இல், 7.37 லட்சம் வெளிநாட்டு பயணியரும், 48.35 லட்சம் உள்நாட்டு மக்களும் தாஜ்மஹாலை பார்வையிட்டனர். கடந்த ஆண்டு தாஜ்மஹாலுக்கு வருகை தந்த வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை, 1.82 லட்சமாகவும், உள்நாட்டு மக்கள், 11.34 லட்சமாகவும் குறைந்துள்ளது என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுற்றுலா பயணியரின் வருகை இல்லாததால், அவர்களை நம்பி தொழில் செய்யும் வழிகாட்டிகள்,  வியாபாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here