ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்

டெல்லி:

நாட்டின் ராணுவ ரகசியங்களை சர்வசாதாரணமாக வாட்ஸ் அப்பில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உரையாடியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்; அல்லது உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் சிறையில் உள்ள பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தாவும், ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடிய விவரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

500 பக்கங்களைக் கொண்ட இந்த உரையாடல்கள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தை டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாக அர்னாப் கருதியது, பாலகோட் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து உரையாடியது உள்ளிட்டவை நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாட்ஸ் உரையாடல்களை முன்வைத்து முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் மத்திய அரசை ட்வீட்டுகளால் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்களான ரந்தீப் சுர்ஜிவாலா, கபில் சிபல், சசி தரூர் ஆகியோரும் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளனர்.

ரந்தீப் சுர்ஜிவாலா: டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வாட்ஸ் அப் உரையாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எத்தகைய நிதி மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் அம்பலப்படுத்தி இருகின்றன. நீதிபதிகளை விலைக்கு வாங்குவது எப்படி என்பது குறித்தும் யார் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தீர்மானிப்பதையும் இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இவை அனைத்துமே நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன. இந்த பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இத்தகைய சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? யார் காரணம்? என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதில்கள் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here