ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்

கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய் பிரியாணி கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் இருபது ரூபாய்க்கு பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, ‘பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க…’ என எழுதிவைத்து இலவசமாக பிரியாணி பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.

மதிய வேளையில், சாலையோரத்தில் இரு குடைகளுக்கு கீழ் அமைந்திருந்த பிரியாணி கடையில் பரபரப்பாக இயங்கி வந்த ஷப்ரினாவை நேரில் சந்தித்தோம்.

சூடான பிரியாணியை ஷப்ரினா தட்டில் எடுத்து வைக்க, அவரது கணவர் வாழை இலையில் பார்சல் கட்டிக்கொண்டே இருந்தார். இருபது ரூபாய் பிரியாணியை ருசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ஒருபுறம் வாடிக்கையாளர்கள் பார்சலை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்துச் செல்கின்றனர். மற்றொருபுறம் ‘பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க’ என எழுதப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்பட்ட பிரியாணி பொட்டலங்களை பலர் எடுத்துச் செல்கின்றனர். இலவசப் பெட்டியில் பொட்டலங்கள் தீர்ந்ததை கவனித்த ஷப்ரினா, விறுவிறுவென்று சில பொட்டலங்களைக் கட்டி மீண்டும் பெட்டியில் வைத்துச் செல்கிறார்.

பிரியாணி தீர்ந்தும் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருந்தனர். வாழ்வாதாரத்திற்கான தொழிலையும், இலவசமாக பசியாற்றும் மனிதசேவையையும் சிறப்பாக செய்துவரும் ஷப்ரினாவிடம் பேசினோம்.

“நான், எனது கணவர், இரண்டு குழந்தைகள் என குடும்பமாக கோவையில் வசித்து வருகிறோம். எனது பூர்வீகம் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை. அங்கு தான் பிறந்து வளர்ந்தேன். உளவியல்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், எனது கணவர் வேலைக்காக கோவைக்கு மாற்றப்பட்டார். அப்போது தான் நாங்களும் இங்கு குடிபெயர்ந்தோம். கடந்த நவம்பர் மாதம், தனியார் நிறுவனம் ஒன்றில் நான் செய்த வேலையை கைவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

எனது கணவரும் உணவகம் சார்ந்த வேலையில் இருப்பதால் சாலையோர பிரியாணி கடை துவங்கலாம் என முடிவு செய்தோம். அதிக விலைக்கு உணவு வழங்குவதில் எனக்கு விருப்பமில்லை. ருசியில் சமரசம் செய்யாமல், தரமான உணவுப் பொருட்களை கொண்டு, குறைந்த லாபத்தை நிர்ணயித்து வெறும் இருபது ரூபாய்க்கு பிரியாணி பொட்டலங்களை விற்கத் துவங்கினோம். ஏராளமான எளிய மக்கள் பலர் இன்று எங்களின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்,” என தெரிவிக்கிறார் ஷப்ரினா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here