திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் செல்ல ரூ.70 கட்டணத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
மெட்ரோ ரெயில்
சென்னை:
சென்னையில் முதலாவது வழித்தடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் உள்ள ரெயில் நிலையங்களில் இருந்து பிற ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
அதன்படி திருவொற்றியூர் விம்கோ நகர், திருவொற்றியூர், காலடிபேட்டை, சுங்கசாவடி, புதிய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து சென்னை விமான நிலையம் செல்ல ரூ.70 கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தியாகராய கல்லூரியில் இருந்து விமான நிலையம் செல்ல ரூ.60 கட்டணமாகும்.
திருவொற்றியூர் விம்கோநகரில் இருந்து சென்டிரல், எழும்பூருக்கு ரூ.50, கோயம்பேடு, ஆலந்தூருக்கு ரூ.70 என கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ரெயில் நிலையங்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.
இதில் பயண அட்டைகளை பயன்படுத்தினால் பத்து சதவீதமும், கியூஆர் குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தினால் 20 சதவீதமும், அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.