கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள்

 

மலேசியர்களின் ஒற்றுமைக்காக 30 ஆண்டுகள் வரைவு திட்டத்தைப் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 2021, பிப்ரவரி 15ஆம் தேதி அறிவித்தார்.

இந்த நீண்ட கால தேசிய ஒற்றுமைத் திட்டம் மலேசியர்களின் ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, தேசப்பற்று இன்றி வெற்றிபெறாது என்ற உண்மையைப் பிரதமர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதே  சமயம் அரசியல்வாதிகள் இன – சமய வாதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தங்களின் அரசியல் வாழ்க்கைக்காக – பிழைப்புக்காக இனவாதத் திருகுதாளங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளிடம் வெகு ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இனவாதம் நடத்தும் அரசியல்வாதிகளே பல இனங்கள் வாழும் நாட்டில் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றனர். இன உணர்வுகளையும் சமய கசப்புணர்வுகளையும் தூண்டிவிடும் அரசியல்வாதிகளை நாம் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று முஹிடின் ஆலோசனை நல்கியிருக்கிறார்.

கேட்பதற்கு எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. ஸ்டீரியோ டைப் ரிக்கார்டர் போன்று திரும்பத் திரும்பக் கேட்கும் – படிக்கும் வசனங்கள்தாம் இவை.
இனவாதம் பேசி – உணர்வுகளைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளை நாம் தவிர்க்க வேண்டும் என்றால் அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவர்.

அம்னோ, பாஸ் தொடங்கி நேற்று முளைத்த பெர்சத்து கட்சி வரை இனம் – சமயம் என்ற மேடை மீது நின்றுதான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைய தலைமுறைக்கு இது பழக்கப்பட்டுவிட்ட களம். ஆனால், 80ஆம் ஆண்டுகள் வரையிலான மலேசியர்களுக்கு இந்த வகையான அரசியல் புதியது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக், மூன்றாவது பிரதமர் துன் ஹுசேன் ஓன் ஆகியோர் ஆட்சி காலத்தில் இனவாதங்களும் சமய குரோதங்களும் கழுத்தறுக்கும் அளவில் இல்லை.

நான்காவது பிரதமராக துன் டாக்டர் மகாதீர் முகமது பதவியேற்ற பின்னர் இந்த இனவாதம் மெல்லத் துளிர்விட்டது. சர்ச்சைக்கை்குரிய மலாய் டெலேமா நூலில் மலாய்க்காரர்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி சீன – இந்திய சமுதாயங்கள் மீதான காழ்ப்புணர்வை மெல்லத் தூவிவிட்டார்.

அன்று பற்ற வைத்த தீப்பொறி இன்று அனலாகத் தகித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதை மறுக்கும் துணிவு யாருக்கேனும் உண்டா?

ஐந்தாவது பிரதமராக துன் அப்துல்லா அமாட் படாவி பதவிக்கு வந்த பின்னரும் இனவாதம் தொடரத்தான் செய்தது. ஆனால், அதன் வேகம் தணிந்துதான் இருந்தது.

ஆறாவது பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் பதவிக்கு வந்தார். இவரின் காலம் இந்திய சமுதாயத்திற்குப் பொற்காலம் என்றால் மிகையாகாது. ஆனால், அதுவும் 2013 பொதுத்தேர்தலில் இந்திய சமுதாயத்தின் வாக்குகள் பக்காத்தான் ராக்யாட் பக்கம் திரும்பியதால் மிரண்டு போன நஜிப், கேட்டதை எல்லாம் வாரி வாரிக் கொடுத்தார் என்பதுதான் உண்மை. இவையாவும் அம்னோ காலத்தில் நடந்தவை ஆகும்.

அதே சமயத்தில் அம்னோ தரப்பில் இருந்து அவ்வப்போது இனவாதத் தீப்பந்தத்தைக் கொளுத்திப் போட்டுக் கொண்டுதான் இருந்தனர். அடக்குவார் இல்லாததால், வெகு சீதந்திரமாக அதனை இன்றளவும்  செய்து வருகின்றனர்.

ஏழாவது பிரதமராக (இரண்டாவது தடவை) துன் மகாதீர் பதவியேற்று நாட்டின் உச்ச பதவிகளில் இந்தியரும் சீனரும் அமர்த்தப்பட்டதால் இனவாத மலாய் அரசியல்வாதிகள் இனவாத அணுகுண்டைக் கையில் எடுத்துக்கொண்டு தாக்குதல் நடத்தினர். இது பெர்சத்து காலம்.

இக்காலகட்டத்தில் மலாய்க்காரர் அல்லாத சமூகங்கள் பயத்தின் உச்சத்தில் இருந்ததையும் மறுப்பதற்கில்லை – மறைப்பதற்கில்லை.

எட்டாவது பிரதமராக பெர்சத்து கட்சியின் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவியேற்ற பின்னர், தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும், சீனர் – இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை அந்தஸ்து பறிக்கப்பட வேண்டும், உச்ச பதவிகள் மலாய்க்காரர்களுக்கே தாரைவார்க்கப்பட வேண்டும் என்ற வன்மக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

அடுத்தவர் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்வதற்கு முன் தன் வீட்டை முன்மாதிரியாக சுத்தமாக வைத்திருப்பதுதான் விவேகம்.

அரசியல்வாதிகள் முதலில் அவர்களின் முகங்களைக் கண்ணாடியில் பார்க்கட்டும். திருந்த வேண்டியது யார் என்பது பளிச்சென்று தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here