மாணவர்களே! வெற்றி உங்கள் வசம்

            மக்கள் ஓசை வாழ்த்துகிறது

நாட்டின் அதி முக்கிய தேர்வுக் களமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் விளங்குகின்றன. 400,445 எஸ்பிஎம் மாணவர்கள் இன்று பிப்ரவரி 22ஆம் தேதியும் 92,964 எஸ்டிபிஎம் மாணவர்கள் மார்ச் 8ஆம் தேதியும் தேர்வுக்கு அமர்கின்றனர்.

அதே சமயத்தில் மலேசியத் தொழில் பயிற்சி சான்றிதழ் (எஸ்விஎம்), மலேசிய சமய உயர் சான்றிதழ் (எஸ்டிஏஎம்) தேர்வுகளை முறையே 23,313 மற்றும் 7,996 மாணவர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 718 மாணவர்கள் எஸ்பிஎம், எஸ்டிபிஎம், எஸ்விஎம், எஸ்டிஏஎம் தேர்வுகளுக்கு அமர்கின்றனர்.2020இல் நடத்தப்பட வேண்டிய இப்பரீட்சகைளை கோவிட்-19 கிருமி பெருந்தொற்று சீற்றத்தால் மலேசிய கல்வி அமைச்சு 2021 முதல் காலாண்டுக்கு ஒத்தி வைத்தது.

2020 மார்ச் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதில் ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை மாணவர்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிப் போகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பள்ளிக்குச் செல்ல முடியாமலும் டியூஷன் வகுப்புகளுக்குப் போக முடியாமலும் மாணவர்கள் பரிதவித்தனர். இயங்கலையில் பாடம் படித்தாலும் நேருக்கு நேர் கற்பித்தல் – கற்றல் முறைக்கு ஈடாக முடியுமா?

ஆத்மார்த்தமாக சொல்லப்போனால் மாணவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாயினர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்தப் பரீட்சகை்குப் பிறகுதான் இம்மாணவர்களது அடுத்தக்கட்ட கல்வி உயர்வுக்கான நகர்வுகள் உறுதி செய்யப்படும். இந்த அதி முக்கிய தேர்வுகளை எதிர்கொள்வதற்கு வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் போதாது.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் அதற்குத் தயாராக வேண்டும். இந்த கோவிட்-19 காலகட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய சவாலாக அவர்களுக்கு அமைந்து விட்டது.

நண்பர்களைப் பார்க்க முடியாமல், விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல், குழு அளவில் ஙே்ர்ந்து பாடங்களை ஆய்வு ஙெ்ய்ய முடியாமல் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகினர்.

இந்த மாணவர்களிடம் வழக்கமாகக் காணப்படும் சுறுசுறுப்பு, இயல்பு வாழ்க்கை அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டது கோவிட்-19 உயிர்க்கொல்லி கிருமித் தொற்று.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தொடங்க இருக்கும் இப்பரீட்சையை எழுதுவதற்கு மாணவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இவர்களுக்கு திடகாத்திரத்தையும் மன வலிமையையும் புத்துணர்வையும் தரும்படி எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் மனதார பிரார்த்திப்போம். நம் பிள்ளைகள் பரீட்சை எழுதவில்லை என்றாலும், இந்த மாணவர்களுக்கு நம் அனைவரின் பிரார்த்தனைகளும் அவசியமாகிறது; காலத்தின் கட்டாயம் ஆகவும் இருக்கிறது.

பெற்றோர் – உற்றார், உறவினர், தாத்தா – பாட்டி நல்லாசியுடன் இம்மாணவர்கள் இன்று தேர்வு களம் காணட்டும். பெற்றோரின் நம்பிக்கை தரும் வார்த்தைகள்தான் இவர்களுக்கு ஊக்க மருந்து – புதிய எழுச்சி!

ஓர் அசாதாரண காலகட்டத்தில் இம்மாணவர்கள் தேர்வுக்கு அமர்கின்றனர். இத்தேர்வில் இவர்கள் அமோக வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் ஓசை நாளிதழ் மனமார பிரார்த்திக்கிறது – வாழ்த்துகிறது.

கொரோனாவின் தொற்று இப்பிள்ளைகளின் கல்வி வாழ்க்கையில் ஒரு புயலையே ஏற்படுத்தி இருந்தாலும் இவர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறம்பட – பரீட்சை எழுதி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைப்பர் என்ற நம்பிக்கை வெகு ஆழமாகவே வேரூன்றியுள்ளது.

இந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கும் வகையில் நமது பிரார்த்தனைகள் இருக்க வேண்டும். இறை நம்பிக்கை இவர்களது கல்விப் பயணத்தில் – லட்சியத்தில் ஒளியேற்றி வைக்கும் என்பது சத்தியமான உண்மை.

மாணவ – மாணவியர்களே, துணிந்து பரீட்சை எழுதுங்கள். வெற்றி உங்கள் வசம். அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here