சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்-

-குடியரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை குளிர்கால ஓலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சீனாவில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் மனித உரிமைகள் அமைப்புகள், சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவருகின்றன.
இந்நிலையில், சீனாவில் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அங்கு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும் என்றும், நிக்கி ஹாலே உள்ளிட்ட குடியரசு கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்பிக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளனர். மேலும், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த வேறு இடத்தை  தேர்வு செய்யும்படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 
ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது தொடர்பான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் வெளியிட வேண்டும் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஐநா முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே இந்த பிரசாரத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சீனா தனது மிகப்பெரிய கம்யூனிச பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக, குளிர்கால விளையாட்டை பயன்படுத்த விரும்புகிறது என்பதில் ரகசியம் எதுவும் இல்லை என்றார். 
சீனா அதன் கொடூரமான மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு, ஒலிம்பிக்கைப் பயன்படுத்துவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
குடியரசு கட்சி தலைவர்களின் இந்த கோரிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பிசாகி கூறுகையில், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார். அதேசமயம், அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் வழிகாட்டுதல்களை பரிசீலனை செய்து அதன்படி முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here