திருமணம் செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் சேர முடியுமா?

பாகிஸ்தானிய இந்து பெண்கள் இருவர் இந்திய இளைஞர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்தின் இரண்டு வருடங்கள் பிரிந்து வாழ்ந்த பின்னர் ராஜஸ்தானுக்கு வந்து தங்கள் கணவர்களுடன் மீண்டும் இணையும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது  
ராஜஸ்தானின் பார்மர் மற்றும் ஜெய்சால்மர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை மணந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்டுகளாக பிறந்த வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. புகுந்த நாட்டுக்குள் வந்து வீட்டிற்கு விளக்கேற்ற வந்த மருமகள்களை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மகேந்திர சிங் ,  மனைவி சாகன் கன்வார், நேபாள சிங் பாட்டி, மனைவி கைலாஷ் பாய் ஆகிய இரு ஜோடிகளும் 2019 ஜனவரியில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இருப்பினும், புதிதாக திருமணமான மணமகள்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீடு இருக்கும் இந்தியாவுக்கு வர முடியவில்லை. இது வரதட்சணைக் கொடுமையோ அலல்து மாமியார் கொடுமையோ காரணம் இல்லை.

திருமணம் முடித்த மணப்பெண்களுக்கு விசா கிடைக்கவில்லை. அவர்களது திருமணம் நடைபெற்றவுடன், மிகப்பெரிய முட்டுக்கட்டை தம்பதிகளை பிரித்தது. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் ,  பாலகோட் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் வெடித்தன, தம்பதிகள் எல்லையின் இருபுறமும் பிரிந்து வாழும் கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது முட்டுக்கட்டைகள் விலகி, விசாவும் கிடைத்து குடித்தனம் நடத்த புகுந்த வீட்டுக்கு இரு மருமகள்களும் வந்துவிட்டனர். தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ளும் மணமகள் சாகன் கன்வார், “திருமணமாகி இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. நான் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டேன்.

விசா மறுக்கப்பட்டதால், எனது எதிர்காலம் குறித்து குடும்பமே ஆழ்ந்த கவலையில் மூழ்கிவிட்டது. இப்போது நான் இந்தியாவுக்கு வந்துவிட்டேன், இப்போதுதான் திருமணமானவள் போல் உணர்கிறேன். கடந்த இரண்டு வருடங்களை கடத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த கடினமான காலத்தையும் கடந்துவிட்டோம். இப்போது நான் இந்தியாவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். “

கணவர் மகேந்திர சிங்கின் மகிழ்ச்சியும் எல்லை கடந்துதான் இருக்கிறது. “கடந்த இரண்டு வருடங்கள் எங்களுக்கு ஒரு கனவு போல இருந்தன. எங்கள் திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் பாகிஸ்தானில் ஒன்றாக வாழ்ந்தோம், ஆனால் மனைவிக்கு விசா கிடைக்கவில்லை. நான் இந்தியாவுக்கு வந்துவிட்டேன், ஆனால் மனைவியை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு, இரு ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதிகளாக இணைந்திருக்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here