போலீஸ் படையின் மாண்பைக் காப்போம்

 

அரச மலேசிய போலீஸ் படைக்குள்ளாகவே ஓர் இளம் போலீஸ் அதிகாரிகள் கும்பல் ஒன்று அப்படையின் அஸ்திவாரத்தையே அசைதை்துப் பார்க்கும் நாசச்செயலில் ஈடுபட்டுள்ளது என்ற ஒரு பகிரங்க குற்றச்சாட்டின் உண்மை நிலையை அதன் ஆணிவேர் வரை சென்று கண்டறிவதற்கு ஆர்சிஐ எனப்படும் அரசு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம் என்பதைவிட அவசியமானது – அவசரமானது என்று ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் மலேசிய வழக்கறிஞர் மன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

கண்டுங்காணாமல் அப்படியே விடப்பட்டால் போலீஸ் படையின் உயர் நெறி மற்றும் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்று மன்றத்தின் தேசியத் தலைவர் ஏஜி காளிதாஸ் எச்சரித்திருக்கிறார்.

ஓர் இளம் போலீஸ் அதிகாரிகள் கும்பல் ஒன்று தம்மைப் பதவியில் இருந்து வீழ்த்தி, போலீஸ் படையை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்வதற்குத் திட்டமிடுகின்றனர் என்று ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் அண்மையில் குற்றஞ்சாட்டினார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. அது மிகக் கடுமையான குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் அரசமலேசிய போலீஸ் படை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அசதை்துப் பார்ப்பதாகவும் இருக்கிறது.

இந்தக் கவலை அளிக்கும் குற்றச்சாட்டு விரைந்து விசாரிக்கப்பட வேண்டும். ஒரு வெளிப்படையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆணிவேர் வரை சென்று உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். இனியும் தாமதம் இன்றி அப்பணி தொடங்கப்பட வேண்டும்.

ஐஜிபி-இன் இக்குற்றச்சாட்டு சதையில் தைத்த ஒரு முள்ளாகவே அருவிக் கொண்டிருக்கும். அப்படியே விட்டு விட்டால் புரையோடிப் போகும். கையைத் துண்டிக்க வேண்டும். உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்.

நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய படைக்குள்ளாகவே நச்சுக் கிருமிகள் என்பது கறையான் புற்று போன்றது. விட்டு விட்டால் உள்ளுக்குள்ளாகவே அரித்து ஒரு வீட்டையே தரைமட்டமாக்கி விடும்.

இவ்விவகாரத்தை விசாரிப்பதற்கு அரசு விசாரணை ஆணையம் அமைக்கப்படாவிடில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உண்மைகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போகலாம்.

அதே சமயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏதோ ஓர் உண்மையை மறைக்கின்றனர் என்ற உணர்வை மக்கள் சிந்தனையில் விதைத்து விடும். அது மட்டும் அல்லாது தேவையற்றோரின் தலையீடுகளையும் நெருக்குதல்களையும் போலீஸ் படை எதிர்நோக்கலாம்.

போலீஸ் படையின் மாண்பு, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கப்பட வேண்டும். போலீஸ் படையில் உள்ள தியாகங்கள் – அர்ப்பணிப்புகள் நிறைந்த அதிகாரிகள் – படை வீரர்கள் நற்பெயருக்கு மாசு ஏற்பட்டு விடக்கூடாது.

மக்களின் உயிர்களை, சொத்துகளைக் காப்பதற்கு சட்டத்தை மதித்து அணிந்திருக்கும் சீருடையை உயிராகப் போற்றி, கடமையைக் கண்ணியத்தோடு செய்யும் அதிகாரிகளின் நற்தோற்றத்தைக் காக்க வேண்டிய பொறுப்புடைமை நமக்கு இருக்கிறது.

தங்களது சுயநலத்திற்ககாக தீயச்செயல்களில் ஈடுபடுவதற்கு இதுபோன்ற கேவலமான சதிநாசத்திற்குத் திட்டமிட்டிருக்கும் கும்பல் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் எனில் அதற்கு மிகச்சிறந்த வழி அரசு விசாரணை ஆணையம் அமைப்பது மட்டுமே!

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here