தம்பிக்கு இப்படி ஓர் அர்த்தமா?

  • மூடர்களின் கண்டுபிடிப்பா?

இந்நாட்டில் வாழும் இந்தியர்களைக் குறிப்பாகத் தமிழர்களை சீண்டிப் பார்க்கவில்லை என்றால் மாற்று இனத்தவர்களுக்கு தூக்கமும் வராது – பொழுதும் விடியாது போலும்.

இவர்களின் அழிச்சாட்டியங்களுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது. என்ன பிறப்பு என்று கேட்கத் தூண்டுகிறது.

ஒரே தவற்றை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கின்றனர். தவற்றை நியாயப்படுத்துவதிலும் பலர் கில்லாடிகளாக இருக்கின்றனர்.

டேவான் பகாசா டான் புஸ்தாக்கா… அரசு உடமையாக்கப்பட்ட தேசிய மொழிக் காப்பகம்!

அனைத்து இனத்தவர்களின் மொழிகளையும் செம்மைப்படுத்தி பெருமை சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்த மொழிக் காப்பகம், இந்தியர்களைக் கேவலப்படுத்துவதற்குத் துணை போகலாமா?

ஆகக்கடைசியாக தம்பி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்கப்பட்டிருக்கும் ஒரு கேள்விக்கு – டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா திணைக்களத்தின் இணைய தளத்தில்  எங்களைவிட ஓர் இளைய கில்லிங் ஆளுக்கான அழைப்பு என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் அவமதிக்கும் கேவலமான  செயல். இது ஒரு நேரடி அவமானம்!

தம்பி என்றால் அடேக் கிச்சில் என்று ஒரே வார்த்தையில் நேரடி விளக்கம் தராமல் இப்படி ஒரு விஷமத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா திணைக்களத்தை என்னவென்று  சொல்வது!

இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள், வயதில் குறைந்த உடன்பிறப்புகளை தம்பி என்று அழைப்பர். நடைமுறையில் தம்பி என்ற வார்த்தை பொதுவான ஒரு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

மலாய்க்காரர்களும் சீனர்களும்கூட இந்தியர்களில் இளையோரை தம்பி என்று அழைப்பது சர்வ சாதாரணம். ஆனால், டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா திணைக்களம் இந்த சொல்லுக்கு ஒரு புதிய வரையறையைத் தந்திருப்பது மிகப்பெரிய அவமதிப்பாகும்.

இந்த வார்த்தை உடனடியாக நீக்கப்பட்டு இந்திய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். கில்லிங் என்ற வார்த்தையை அத்திணைக்களம் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நீக்க வேண்டும்.

ஒற்றுமை, ஒற்றுமை என்று ஓராயிரம் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவ்வாறான ஒரு கேடுகெட்ட செயலால் அதற்கு ஆணி அடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மத்திய அரசாங்கம் மனதார உணர வேண்டும்.

கில்லிங் என்ற சொல் முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று ஓர் உறுதியான உத்தரவை அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும்.
சமய – மத தீவிரவாதிகள்தாம் இப்படி தறிகெட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மெத்தப் படித்தவர்கள் – மொழி அறிஞர்கள் நிறைந்திருக்கும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா திணைக்களத்திலும் இப்படி ஒரு கேவலம் நடப்பதுதான் உச்சபட்ச அவமானமாக இருக்கிறது.

இந்திய சமுதாயத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இப்படி அசிங்கப்படுத்தப் போகிறார்கள்?

மற்ற இனத்தவர்களுக்கும் தனித்தனியே ஓர் அடைமொழி உண்டு. அதனை நமது படைப்புகளில் வெளியிட்டால் நிலைமை என்னவாகும்?

நாட்டையும் வீட்டையும் மதித்து மற்றவர்களின் மாண்புக்கு களங்கம் வராமல் பாதுகாக்கும் இந்தியர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தவறு என்பது தவறுதான்! அதனை நியாயப்படுத்தி இந்தியர்களை அசிங்கப்படுத்துவது இனியும் தொடர வேண்டாம்.
அசிங்கம்தான் எங்களின் இயல்பு என்று நீங்கள் நினைத்தால் – வாதிட்டால் அசிங்கத்தின் அசிங்கமே உங்களைத் திருப்பி அடிக்கும்!
எந்தவோர் இனத்தையும் அவமதிக்கும் சொல் முற்றாக தடை செய்யப்படுவதை அரசாங்கம் உறுதி செய்திட வேண்டும்.
– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here