போலீஸ் படையில் கெட்ட கலாச்சாரம் ஒழியட்டும்

 

அரச மலேசியப் போலீஸ் படை நாட்டுக்கானது – மக்களுக்கானது. தனிநபர்களின் அதிகார வேட்கைக்கானது அல்ல என்பதை நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தாற்போல் தெளிவுபடுத்தியிருக்கிறார் ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர்.

மலேசியர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். மக்களுக்கு நனிச்சிறந்த சேவைகளை வழங்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கும் அரணாகவும் விளங்க வேண்டும்.

போலீஸ் நிலையங்கள் மக்களின் குறை கேட்டு அவற்றுக்குத் தீர்வு காணும் களமாகத் திகழ வேண்டும். மக்கள் போலீஸ் நிலையங்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கும் சுழல் ஏற்படவே கூடாது.

மலேசிய போலீஸ் படை என்னுடையது அல்ல. அது நாட்டிற்குச் சொந்தமானது. ஐஜிபி என்ற முறையில் படையைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது.

படையில் உள்ள தவறுகளையும் தப்பான கலாச்சாரங்களையும் சரிசெய்து நல்வழிப்படுத்தும் மிகப்பெரிய கடமை எனக்கு இருக்கிறது என்று தம்முடைய மன ஆதங்கங்களைப் பகிரங்கமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார் ஹமிட் படோர்.

தன் உள்ளத்தில் இதுநாள் வரையில் தேக்கி வைத்திருந்தவற்றை மடை திறந்த வெள்ளமாக ஓடவிட்டிருக்கிறார். புரையோடிப் போவதற்கு முன் போலீஸ் படையைச் சீரமைப்பதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அதனை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பேன் என்று சுளுரைத்தும் இருக்கிறார்.

காலம் கனியும்போது நானாகவே சென்றுவிடுவேன். மறைமுகமாக தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை. என் சக்திக்குட்பட்டதை, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் கடமையை மிக நேர்மையாகவும் சரியாகவும் செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே என் முழுக் கவனமும் இருக்கிறது.

இதற்குப் பொதுமக்களின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உண்மைகளைச் சொல்வதற்குத் தைரியமாக முன்வாருங்கள். கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருப்பதாவது போலீஸ் படையைத் தூய்மைப்படுத்தும் அவரின் உன்னத நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

தம்முடைய பணிக்கால ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்காக தாம் இதனைச் செய்வதாகச் சிலர் விஷமத்தனமாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் ஐஜிபி ஆக இருந்தால் இதைத்தான் ஙெ்ய்வார்கள் – சிந்திப்பார்கள்.

தமக்கு அந்த அவசியமே இல்லை. ஓர் உண்மையான போலீஸ்காரனாக இருப்பதுதான் தமது லட்சியம் என்றும் அவர் மனம் திறந்திருக்கிறார்.

போலீஸ் படையில் வஞ்சகர்களும் கோணல்புத்தி உள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களுள் ஓய்வுபெற்ற சில போலீஸ் உயர் அதிகாரிகளும் உள்ளனர் என்ற உண்மையைப் பட்டென போட்டு உடைத்திருப்பதன் மூலம் அவரின் வார்த்தைகளுக்கு ஹமிட் படோர் உரம் சேர்த்திருக்கின்றார்.

சிலரின் எதிர்மறையான நடவடிக்கைகள், கெட்ட கலாச்சாரம் கீழ்நிலையில் இருந்து மேல் மட்டம் வரை புரையோடிப் போயிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் ஐஜிபி குறுக்கே நிற்பார். இது கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் உயர் அதிகாரிகள் சிலர் இன்னமும் அனுகூலங்களை எதிர்பார்க்கின்றனர்.

மறுக்கப்படும்போது தவறான தகவல்களைக் கட்டவிழ்த்துவிட்டு சகதியை வாரி இறைக்கின்றனர்.

நான் தவறு செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். அப்படி நான் என்ன தவறு செய்துவிட்டேன்? உங்கள் முன் நிற்கிறேன். சவால் விடுகிறேன். பதில் சொல்லுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களின் முகத்திற்கு நேரே சூளுரைத்திருப்பதும் அவரிடம் உள்ள நெஞ்சுரத்தைக் காட்டுகிறது.

போலீஸ் படையில் அணி என்ற பிணி இருப்பதையும் அவர் மூடிமறைக்கவில்லை. பழைய சிந்தனையில்தான் அவர்கள் இன்னமும் உழன்றுகொண்டிருக்கின்றனர். ரகசியமாகக் கூட்டம் போடுகின்றனர். பதவிக்காக எதையும் செய்வதற்குத் துணிகின்றனர்.

இந்தக் கெட்ட செயல்களை எல்லாம் கூட்டிப் பெருக்கி கார்ப்பெட்டுக்கு அடியில் தள்ளி மூடிவைப்பவராக ஹமிட் படோர் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

உண்மையைச் சொல்ல வருபவர்களை மிரட்டும் பாணி இனியும் எடுபடாது என்று நம்புவோம். போலீஸ் படையில் உள்ள 10 இலாகாக்களும் ஒன்றிணைந்து ஐஜிபி ஹமிட் படோரின் தூய்மைப் பணிக்குக் கரங்கொடுக்க வேண்டும். போலீஸ் மாண்பு தலைநிமிரட்டும்.
– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here