பட்டினிப்போராட்டம் நடத்தி சாகவும் தயார்

 – இசைக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

உலகம் முழுவதும் கரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவில் அதனைத் தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி, இந்நோயில் இருந்து காப்பாற்ற அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளையும் சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தடைகளை விதித்துள்ள தமிழக அரசு, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அதனால் பலதரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேடை மெல்லிசைக் கலைஞர்களின் குடும்பங்கள் இன்று (12.04.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தங்களுடைய வாழ்வாதாரத்தை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ‘மத்திய மாநில அரசுகள், திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி எங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு துறைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கென்று ஒரு நல வாரியத்தை அமைக்க வேண்டும்; மாதம் 20 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘எங்களுடைய கோரிக்கையை இந்த அரசு ஏற்க மறுத்தால், நாங்கள் குடும்பத்தோடு எங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, தேர்தல் அடையாள அட்டை என அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து, பட்டினிப்போராட்டம் நடத்தி சாகத் தயாராக உள்ளோம்’ என்று இசைக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here