– நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்-அன்வார் வேண்டுகோள்
கோலாலம்பூர்-
மலேசியாவில் புதிய பட்டதாரிகளுக்கு மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் பிரச்சினையை விவாதிக்க நாடாளுமன்றத்தைத் தேசியக் கூட்டணி அரசு விரைந்து கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிகமான பட்டதாரிகள் மாதம் 1,100 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரைதான் சம்பளம் பெற்று வந்துள்ளனர் என்பதை உயர்கல்வி அமைச்சின் ஆய்வு காட்டுவதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டில் சுமார் 70 விழுக்காடு பட்டதாரிகள் வேலை வாய்ப்பைப் பெற முடிந்தது என்றும் ஒரு குடும்பத்தின் வறுமைக்கோட்டின் அளவு போலவே பட்டதாரிகளுக்குச் சம்பளம் கிடைத்திருக்கிறது எனவும் அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு 25 ஆயிரம் பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரிகள் மிகக்குறைந்த சம்பளத்தைப் பெற்றிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய பட்டதாரிகளுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்காததற்கு கோவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் காரணமாகச் சொல்லக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.