புதிய அரசியல் அத்தியாயம் பூக்குமா?

ஓர் அரசியல் பார்வை

அம்னோ – கெஅடிலான் – ஜசெக இணைந்தால் சாத்தியமா?

 

-எம்.எஸ். மலையாண்டி

மலேசிய அரசியல் வரலாற்றில் தற்போதைய சுழ்நிலையில் புதிய அரசியல் அணி என்பதெல்லாம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஏற்கெனவே பாஸ் உள்ளிட்ட கட்சிகள் இதுபோன்ற ஒரு புதிய அரசியல் அணியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்த நிலை மாறி தற்போது அம்னோவும் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

பெர்சத்து, அமானா உள்ளிட்ட கட்சிகளும் புதிய அரசியல் அணியை ஏற்றுக்கொள்வதற்கு எப்போதுமே தங்கள் கதவுகளைத் திறந்துவைத்திருக்கின்றன. வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான அம்னோ – டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான கெஅடிலான் – லிம் குவான் எங் தலைமையிலான ஜசெக ஆகிய கட்சிகளுக்கு இடையே ஒரு புதிய அரசியல் அணி தோன்றலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.

கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் பகாங்கிலுள்ள பெசெரா சட்டமன்றத் தொகுதியில் பாஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்த மதப்போதகரான உஸ்தாஸ் அஸஹார் இட்ருஸ், மக்களிடையே பேசும்போது இஸ்லாமியர் அல்லாத சகோதரர்களும் நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார்.

அவருடைய கருத்துப்படி டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் தலைமையிலான பாஸ் கட்சிக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் ஆதரவு வெற்றிக்குத் தேவை என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

முன்பு பாஸ் கட்சி கட்சித் தாவலை கடுமையாக எதிர்த்தது. ஆனால் இன்று அந்தக் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

முன்பு ஜசெகவுடன் பாஸ் நட்புறவாக இருந்தது. பெர்சத்து கட்சியும் இதேபோன்ற மனப்போக்கைத்தான் கொண்டிருந்தது. 1998 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் பாஸ் கட்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும்ம்.

முன்பு ஜசெக, கெஅடிலான் ஆகிய கட்சிகளுடன் பாஸ் கட்சி நட்புறவாக இருந்துள்ளது. ஆனால், இப்போது பாஸ் கட்சிக்கு ஜசெக என்றாலே கசப்பாக இருப்பது ஏன் என்று மிகப்பெரிய கேள்வியாகும்.

முன்பிருந்த அதே தலைமைத்துவம் தான் இப்போதும் ஜசெகவில் நீடிக்கிறது. லிம் கிட் சியாங், லிம் குவான் எங், ஙா கோர் மிங் உள்ளிட்டவர்கள் இன்றும் இருக்கின்றனர். ஆனால் இப்போது அம்னோ கட்சி கெஅடிலானுடனும் ஜசெகவுடனும் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் அது சரியல்ல என்று பாஸ் வாதம்புரிவது வியப்பாக உள்ளது.

1998ஆம் ஆண்டு அம்னோவில் இருந்து விலகிய தெங்கு ரஸாலி ஹம்ஸா, செமாங்காட் 46 எனும் மலாய்க் கட்சியைத் தோற்றுவித்தார். அப்போது அம்னோவுடன் எதிர்ப்பான நிலையைக் கொண்டிருந்த தெங்கு ரஸாலியுடன் பாஸ் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது.

இதனால் 1990ஆம் ஆண்டிலும் 1995ஆம் ஆண்டிலும் நடந்த ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பாஸ் கட்சி 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றியைப் பதிவுசெய்தது.

1999ஆம் ஆண்டு பாஸ் கட்சி, மாற்று முன்னணி எனும் புதிய கூட்டணியில் இணைந்தது. அந்தக் கூட்டணியில் ஜசெகவும் கெஅடிலானும் இடம்பெற்றிருந்தன. கெஅடிலான், பாஸ், ஜசெக ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வி.ஏ. எனப்படும் மாற்றுக் கூட்டணி பாஸ் கட்சிக்கு அரசியல் ரீதியாக சாதகமாகவே அமைந்தது என்பது வரலாறு.

இந்தக் கூட்டணியில் இணைந்ததால் 1999ஆம் ஆண்டு நடந்தபொதுத்தேர்தலில் பாஸ் கட்சி 27 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. 2004ஆம் ஆண்டில் இந்த மாற்று முன்னணியில் ஜசெக இடம்பெறாத நிலையில் பாஸ் கட்சிக்கு வெறும் 7 நாடாளுமன்ற இடங்களே கிடைத்தன.

பின்னர் 2008ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் இந்த மாற்றுக் கூட்டணி மக்கள் கூட்டணியாக மறுஉருவம் பெற்றது. இதில் ஜசெக மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டது.

இதே கூட்டணியில் இருந்து பாஸ் கட்சியின் வெற்றி மீண்டும் அதிகரித்தது. 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஸ் கட்சி 23 நாடாளுமன்ற இடங்களிலும் 2013இல் 21 இடங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்ய முடிந்தது.
பாஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டபோது அதனால் இந்த அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. 1999ஆம் ஆண்டிலும் 2008ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் ஜசெகவுடன் அந்தக் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டதால் 1999இல் 27 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 2008இல் 23 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 2013இல் 21 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அந்தக் கட்சி வெற்றிபெற முடிந்தது.

கிளாந்தான், திரெங்கானு, கெடா போன்ற மலாய் சமூகத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் பெர்சத்து கட்சியால் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாஸ் கட்சி கருதுகிறது.

இந்த மாநிலங்களில் தங்களுக்கு முதல் எதிரி அம்னோதான் என்று பாஸ் கருதுகிறது. அம்னோ ஒரு புதிய அரசியல் அணியைத் தோற்றுவிக்க விரும்பினால் தேசிய முன்னணியின் முக்கிய உறுப்புக்கட்சிகளான மஇகாவும் மசீசவும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிவிடும்.

இன்றைய அரசியலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அங்குள்ள 62 அம்னோ கிளைகளில் 61 கிளைகள் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் மசீச போட்டியிடக்கூடாது எனவும் அம்னோதான் களமிறங்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியைத் தற்காத்துக்கொள்வதில் மசீச தோல்விகண்டது. மசீச தேசியத் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஆங் சுன், டத்தோஸ்ரீ ஓங் கா சுவானுக்குப் பதில் அந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட கெஅடிலான் வேட்பாளர் சாங் லீ காங்கிடம் அவர் 5,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தச் சூழ்நிலையில்தான் மலேசிய அரசியல் வரலாற்றில் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அணி தோன்றக் கூடும் என எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் புதிய அரசியல் அணி வாயிலாக 60 விழுக்காட்டிற்கும் மேலாக மலாய் வாக்காளர்கள் கொண்ட தொகுதிகளில் அம்னோ போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தில் தேசிய முன்னணி கண்டிப்பான மனப்போக்கை அல்லது கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகும்.

அந்த அடிப்படையில் பார்த்தால் ஜசெக வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சட்டமன்றத் தொகுதிகளிலும் மசீசவும் மஇகாவும் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். இது உண்மையில் தவிர்க்க முடியாதது. தேசிய முன்னணியும் இதை உணர்ந்திருக்கிறது.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளிலும் அம்னோ போட்டியிட வேண்டும் என்பது அந்தக் கட்சியில் இருந்து எழக்கூடிய கோரிக்கையாகவும் அமைந்திருப்பதை நாம் உணர வேண்டும்.

புதிய அரசியல் அணியில் அம்னோ – கெஅடிலான் – ஜசெக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறுமானால் இவற்றால் தலா 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அந்தக் கட்சிகள் 120 நாடாளுமன்றத் தொகுதிகளைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள முடியும்.

நாடாளுமன்றத்தில் சொற்பப் பெரும்பான்மைக்குத் தேவை 112 இடங்களாகும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். தற்போது அரசியல் சுழ்நிலையைக் கருதி இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசுவதற்குத் தயாராக இருக்கின்றனர்.

நாடு ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை நோக்கியும் அரசியல் சுழ்நிலையை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் விவேகமிக்க மலேசியாவுக்குப் புதிய அரசியல் அணுகுமுறை தேவை என்பது காலத்தின் கட்டாயமாகும்.

வரக்கூடிய 15ஆவது பொதுத்தேர்தலில் தேசியக் கூட்டணி அரசு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் சேவையை மீண்டும் பயன்படுத்துமா என்பதும் இங்கு எழும் கேள்வியாகும்.

புதிய அரசியல் அணி அல்லது புதிய அரசியல் அணுகுமுறை என்பது 15ஆவது பொதுதுதேர்தலில் ஒரு புதிய சகாப்தத்தை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்தலாம் என்று நடப்பு விவகார ஆய்வாளர் டத்தோ டாக்டர் அமாட் ஃபாரிஸ் அப்துல் ஹலிம் தனது கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

  • செய்தி : எம்.எஸ். மலையாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here