சாங்கி விமான நிலைய ஊழியர்கள்

அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை

சிங்கப்பூர்-

சாங்கி விமான நிலைய முனையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் தெரிவித்துள்ளன.

முனையம் 3இன் தரைத்தளம் 2இல் செயல்படும் உணவு, பானக் கடைகளும் சில்லறை விற்பனைக் கடைகளும் அந்தத் தளமும் பொதுமக்களுக்கு மூடப்பட்டு இருக்கின்றன. கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக அவற்றின் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதனிடையே, கோவிட்-19 பரிசோதனை பற்றி தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக விமான நிலைய ஊழியர்களில் சிலர் கூறினர். முனையம் 4இல் அமைக்கப்பட்டு இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் இன்று கட்டுமானத் துறை ஊழியர்களும் சிஸ்கோ பாதுகாப்புக் காவலர்களும் வரிசைப்பிடித்து நின்றதைப் பார்க்க முடிந்தது.

முனையம் 3இல் இருந்து இடைவழிப் பேருந்திலும் பொதுப் பேருந்துகளிலும் கோவிட்-19 பரிசோதனைக்காக பலரும் வந்தனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட விமான நிலைய முன்களப் பணியாளர்கள் 28 நாட்களுக்கு ஒரு தடவை என்ற வழக்கமான பரிசோதனைச் செயல்திட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்று இருக்கிறார்கள்.

இப்போது அவர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஊழியர்களில் 92 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்றாலும் இன்னமும் தொற்று ஆபத்து இருக்கிறது என்பதை சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் சுட்டிக்காட்டி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here