புத்ராஜெயா, மே 11-
கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் தொழிலாளர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்காத முதலாளிகள் மீது 1988 தொற்றுநோய்த் தடுப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கலாம்.
கோவிட்-19 மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட பிறகு தொழிலாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்த முதலாளிகள் அனுமதி வழங்க வேண்டுமென்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
அனுமதி வழங்காவிட்டால் சட்டப்பிரிவு 342இன் கீழ் நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என நேற்று நடைபெற்ற கோவிட்-19 தேசியத் தடுப்புப்பூசித் திட்டத்திற்கான செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேரடி தொடர்பில் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் வீடுகளில் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்படுவர். அவர்களுக்குப் பிரத்தியேக கை வளையமும் வழங்கப்படும்.
ஒருவேளை அவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டாலும் தன்னார்வ முறையில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.