பொருந்தாத கருத்துக்கு சிங்கப்பூர் அரசு மறுப்பு

ஆபத்தான உருமாற்றத்திற்கு பொறுப்பில்லை!

சிங்கப்பூரில் ஆபத்தான உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், உடனடியாக சிங்கப்பூர் விமானச் சேவையை நிறுத்த வேண்டும் என்று கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்தை சிங்கப்பூர் அரசு மறுத்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், ‘சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3-ஆவது அலை இந்தியாவில் உருவாகலாம். ஆதலால், மத்திய அரசுக்கு நான் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவையையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் ‘ சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக சிலர் கூறும் கருத்துக்கள் உண்மைக்கு மாறானாவை. சிங்கப்பூரில் எந்தவிதமான புதிய உருமாற்ற கரோனா வைரஸும் இல்லை.

கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் உடலில்இருப்பது இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் பி.1.617.2 வகை வைரஸ்தான்.

வைரஸ்களின் வளர்ச்சி, பகுப்பு குறித்த ஆய்வில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு வைரஸ் திரள்களுடன் இந்த பி.1.617.2 உருமாற்ற வைரஸுக்கு தொடர்பு இருக்கிறது என்ற பரிசோதனையில் தெரியவந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ மரியாதைக்குறிய கேஜ்ரிவாலுக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சிங்கப்பூருக்கு அனைத்து விமானச் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம்தான் இரு நாடுகளின் ஒப்புதலின் அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிப்போம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here