கோவிட்-19 வைரஸின் தோற்றத்தை விரைந்து கண்டுபிடிக்குமாறு உளவுத்துறைக்கு ஜோ பைடன் உத்தரவு ; சினமடையும் சீனா

நியூயார்க்: உலகையே ஆட்டிப்படைத்து வரும் கோவிட்-19 வைரஸின் தோற்றம் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட் வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்த உறுதியான தகவல்களைத் திரட்டுவதிலும், அவற்றை ஆய்வு செய்வதிலும் உங்கள் முயற்சியை இரட்டிப்பாக்குங்கள் என அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 90 நாட்களில் தனக்கு கோவிட் பரவல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளார்.

மேலும் “ஒரு முழுமையான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், இதனுடன் தொடர்புடைய தரவுகள் மற்றும் ஆதாரங்களுக்கு அனுமதியை வழங்கவும் சீனாவிற்கு அழுத்தம் தர, உலகம் முழுவதுமுள்ள நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து செயல்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜோ பைடனின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கோவிட்-19 தோற்றத்தை அரசியலாக்கினால் அது தொடர்பாக மேலும் நடைபெறவிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் இது தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை வலுவிழக்கச் செய்யும்” என கூறியுள்ளது.

மேலும், உலகளவில் கண்டறியப்பட்ட ஆரம்ப கால கோவிட் பாதிப்பு பற்றிய விரிவான ஆய்வுக்கும், உலகெங்கிலும் உள்ள சில ரகசிய தளங்களிலும், உயிரியல் ஆய்வகங்களிலும் முறையான விசாரணை நடத்துவதற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் சீன தூதரகம் கூறியுள்ளது.

இதே நேரத்தில், சீனாவில் ஆய்வு நடத்தும்போது, தங்களுக்குப் போதுமான தரவுகளை அந்த நாடு வழங்கவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here