பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்

விலையேற்றத்திற்கு நாமே காரணமா?

பினாங்கு-
நாளை செவ்வாய்க்கிழமை  அமலுக்கு வரும் முழு கட்டுப்பாட்டு ஆணையினால் பயனீட்டாளர்கள் எந்தவித அச்சத்துடனும் தங்கள் வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நமக்குத் தேவைப்படும் அனைத்து பொருட்களும் போதுமான அளவுக்கு கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்திருப்பதால், பயனீட்டாளர்கள் பீதியில் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என். வி. சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

முழு கட்டுப்பாட்டு நேரத்தில் ஒரு பொருள் கிடைக்காமல் போகுமானால் அதற்குப் பயனீட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும். பீதியின் காரணமாக அதிகமான பயனீட்டாளர்கள் தேவைக்கும் அதிகமான அளவில் பொருட்களை வாங்கி தங்களது வீட்டில் குவித்து விடுகின்றனர்.

சில நேரங்களில் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பொருளுக்கான விலையும் அதிகரித்து விடுகிறது. இதற்கு பயனீட்டாளர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும்போது கூடவே அதன் விலையும் ஏறிவிடுகிறது என்று அவர் கூறினார்.

ஆகவே பயனீட்டாளர்கள் பீதியடைந்து  பொருட்களை முண்டியடித்து  வாங்குவதை நிறுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பொருட்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைக்கவும் கூடாது. அப்படி செய்வதால் சில பொருட்கள்  காலாவதியாவதும் கெட்டுபோக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

வாரத்தில் ஒரு நாள் மட்டும் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்குவதே நல்லது. என்ன பொருள் வாங்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது அதைவிட நல்லது.

செ.குணாளன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here