சுங்கை சிப்புட் தொகுதியில் தடுப்பூசி மையம்

மக்களுக்கு முன்னுரிமை வேண்டும்!

சுங்கை சிப்புட்-

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்தது வருகின்ற நிலையில் அதன் மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை.

இந்நிலையில் கோவிட்-19 தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்றும் வண்ணமாக நம் நாட்டு அரசாங்கம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி மக்களை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

சுங்கை சிப்புட் தொகுதியை எடுத்துக் கொண்டால் இங்கு இன்னும் தடுப்பூசி மையம் அமைக்கப்படவில்லை. ஆனால் கோலகங்சார் மாவட்டத்தில் தடுப்பூசி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுங்கை சிப்புட் தொகுதியில் வாழும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமேயானால் ஏறத்தாழ 45, 50 நிமிடங்கள் பயணிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவர்.

மேலும் வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் அங்கு செல்வதற்கு பெரும் அளவில் சிக்கல்களைத் எதிர்நோக்குகின்றனர். மேலும் பலரிடம் சொந்த வாகனங்கள் இருக்காது. கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன என்று கூறினார் பெனராஜு இன்சான் சுங்கை சிப்புட் அரசுசாரா இயக்கத்தின் தலைவர் இந்திராணி செல்வகுமார்.

ஆகையால் பொதுமக்களின் நலன் , போக்குவரத்து வசதி கருதி கடந்த மே மாதம் கோலகங்சார் மாவட்ட சுகாதார இலாகாவின் உயர் அதிகாரி டாக்டர் சியூவிடம் சுங்கை சிப்புட்டில் ஒரு தடுப்பூசி மையம் அமைக்கும்படி கேட்டுக் கொண்டதாக இந்திராணி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

தன்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டாக்டர் சியூ அடுத்த ஜூலை மாதம் தொடங்கி சுங்கை சிப்புட்டில் உள்ள கோலகங்சார் நகராண்மைக்கழக மண்டபத்தில் தடுப்பூசி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று உறுதியளித்ததாகக் கூறினார்.

சுங்கை சிப்புட் தொகுதியில் வாழும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக இனியும் கோலகங்சார் நகருக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஜூலை மாதம் தொடங்கி இங்கேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் இந்திராணி குறிப்பிட்டார்.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் பெயர் பட்டியலை டாக்டர் சியூவிடம் ஒப்படைத்தார் இந்திராணி.

 

-டில்லிராணி முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here