மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. எச்சரிக்கை

மியான்மரில் மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவரும் ராணுவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ‘மியான்மர் ராணுவத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கயா மாகாணத்தில் பசியாலும், நோயாலும் மக்கள் இறக்கின்றனர். மியான்மர் ராணுவ நடவடிக்கை காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கயா மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்திற்கு அளித்து வரும் உதவிகளை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்தது முதல் இதுவரை நடந்த போராட்டங்களில் 800க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

மியான்மர் ராணுவம் வன்முறை

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மேலும், ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here