விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெஸோஸ்!
நியூயார்க்:
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு செல்ல இருக்கிறார். இவரின் சிறிய குழு ஒன்றும் விண்வெளிக்கு டிரிப் செல்ல இருக்கிறது.
பூமியில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி இருந்தது போதாது என்று தற்போது விண்வெளியிலும் நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. விண்வெளி சுற்றுலாவை கைப்பற்றும் வகையில், எதிர்காலத்தில் மார்ஸ் போன்ற கிரங்களுக்கு பயணிகளை அழைத்து செல்லும் வகையில் உலகின் பெரும் பணக்காரர்கள் பல்வேறு ஸ்பேஸ் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இதில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் ரிச்சர்ட் கடந்த வாரமே வெற்றிகரமாக தனது குழுவோடு விண்வெளிக்கு சின்ன டிரிப் அடித்துவிட்டு திரும்பிவிட்டார்.
ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் தி நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட் மூலம்தான் இவர்கள் விண்வெளிக்கு செல்கிறார்கள். இந்த தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் என்பது ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடியது. இதற்கு பைலட் தேவையில்லை. விண்வெளிக்கு சென்று பின் மீண்டும் லேண்ட் ஆகும் திறன் கொண்டது. ஆம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 வகை ராக்கெட்டுகள் விண்ணுக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு சென்றது போலவே ரிட்டர்ன் அடிக்குமே.. அப்படித்தான் இதுவும் பூமிக்கு திரும்பி வரும்.
தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் முன் பக்கம் கேப்ஸ்யூல் போன்ற வடிவமைப்பு இருக்கும். கூம்பாக இருக்கும் இந்த பகுதிக்கு உள்ளேதான் ஜெப் பெஸோஸ் குழு இருக்கும். இவர்கள் உள்ளே இருந்து எதுவும் செய்ய மாட்டார்கள். இவர்கள் வெறுமனே பயணத்தை என்ஜாய் செய்வது மட்டுமே வேலை. இந்த தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கர்மன் லைன் வரை இந்த கேப்ஸ்யூலை கொண்டு செல்லும்.
அதாவது 100 கிலோ மீட்டர் உயரம் வரை பூமியில் இந்த கேப்ஸ்யூலை தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கொண்டு செல்லும். அதன்பின் இந்த கேப்ஸ்யூல் தனியாக கழன்று கொண்டு மேலும் சில கிலோ மீட்டர்கள் வானத்தில் பறக்கும். இந்த ராக்கெட் கேப்ஸ்யூலை டிராப் செய்துவிட்டு, பூமிக்கு திரும்பிவிடும். ஏவப்பட்ட இடத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் இந்த ராக்கெட் தரையிறங்கிவிடும். இன்னொரு பக்கம் கேப்ஸ்யூல் 100 கிமீ உயரத்தை தாண்டி சில கிலோ மீட்டர்கள் செல்லும். மொத்தமாக 6 நிமிடங்கள் கேப்ஸ்யூலுக்கு உள்ளே குழு குறைவான புவி ஈர்ப்பு விசையை உணரும்.
இதனால் உள்ளே 6 நிமிடம் குழு லேசாக மிதக்கும். கர்மன் லைனை தாண்டிய பின் கேப்ஸ்யூலில் இருக்கும் சிறிய ரக பூஸ்டர்கள் மூலம் கேப்ஸ்யூல் திசை திருப்பப்படும். இதன் மூலம் பூமியை நோக்கி அது திரும்பி வரும். இது அனைத்திற்கும் 6 நிமிடங்கள் ஆகும். பின்னர் வேகமாக இந்த கேப்ஸ்யூல் பூமியை நோக்கி வரும் போது பாராசூட் திறக்கப்படும். பூமியில் இருந்து 26 கிமீ உயரத்தில் இருக்கும் போது இதன் பாராஷுட் திறக்கப்பட்டு வேகம் குறைக்கப்படும்.
இதனால் கடைசி 4 நிமிடங்கள் மிக மெதுவாக கேப்ஸ்யூல் கீழே இறங்கி, பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கும். 1.6 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கேப்ஸ்யூல் பத்திரமாக தரையிறங்கும். மொத்தமாக மேலே சென்று கீழே வர 10 நிமிடம்தான்.
இரண்டு “ராஜா சார்” பாட்டு கேட்கும் நேரத்தில் ஜெப் விண்ணுக்கு சென்றுவிட்டு திரும்பி விடுவார். வானத்தில் இருக்கும் போது இவர்கள் பூமியின் வடிவமைப்பை ஜன்னல்கள் வழியாக பார்க்க முடியும். இந்த மொத்த பயணத்திலும் பைலட் யாரும் இடம்பெற மாட்டார். மொத்தமாக பைலட் இல்லாத ஆட்டோபைலட் ராக்கெட்டில், மனிதர்கள் குழு பயணம் மேற்கொள்ளவது இதுவே முதல்முறை.









