புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்: நாசா
சென்னை:
சென்னை அமெரிக்க துணைத்தூதரகம் “புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்” என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்க விண்வெளி பொறியாளர் டாக்டர் ஸ்வாதி மோகனுடன் ஒரு மெய்நிகர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 28ஆம் தேதி புதன் கிழமை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.
டாக்டர் ஸ்வாதி மோகன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவில் ஜெட் உந்துசக்தி ஆய்வகத்தில் வழிகாட்டுதல், கட்டுப்பாட்டுப் பொறியியல் குழுவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். அவரே நாசாவின் 2020 செவ்வாய் கிரக திட்டத்துக்கான வழிகாட்டுதல், கட்டுப்பாட்டுப் பணிகளின் மேற்பார்வையாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
“புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்” என்ற தலைப்பில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் அமெரிக்காவில் சாதனை புரிந்த இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தையும், இந்திய-அமெரிக்க உறவு மேம்பாட்டில் தங்கள் பங்களிப்பு பற்றியும் பேச உரையாடல் தொடர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகம், கல்வி, புது முயற்சிகள், உடல்நலம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பினை உலகறியச் செய்யும் முயற்சி இது.
இந்த உரையாடல் தொடர் சென்னை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் அவர்களால் துவக்கி வைக்கப்படும். “நாற்பது லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். இந்த முயற்சி, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள் வளரவும், வலுப்பெறவும் உதவிகரமாக இருக்கும். புலம்பெயர்ந்த இந்தியர்களின் குரல் பொதுமக்களைச் சென்றடைவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது டாக்டர் ஸ்வாதி மோகன், ஐ,நாவின் விண்வெளியில் பெண்கள் கூட்டமைப்பின் இந்திய கிளையின் ஆலோசகர் தீபனா காந்தி, மாணவர்கள், பத்திரிகையாளர்கள், விண்வெளி ஆர்வலர்களோடு உரையாடுவார்.
இந்த உரையாடலில், அவரது இந்தியாவுடனான குடும்ப உறவு, அமெரிக்க மேற்படிப்பு, செவ்வாய் கிரக திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள், மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்த கருத்துக்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வார்.
இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம் : https://statedept.zoomgov.com/webinar/register/WN_Zh6CxJU7QyugRH3gJ9FlEg?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகும்: https://www.facebook.com/chennai.usconsulate/. நிகழ்ச்சியின்போது, கருத்துக்கள் பகுதியில் பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு டாக்டர் ஸ்வாதி மோகன் பதிலளிப்பார்.









