வரும் துன்பத்தை விரட்டியடிப்போம்!
பினாங்கு இந்து சங்கம் அறிவுறுத்தல்
ஜார்ஜ்டவுன்-
ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரியான மாற்றத்தை காணாத சமுதாயம் தங்களின் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு அடிப்பணிந்து கூலிப்படையாகத்தான் வாழும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை உணர வேண்டும் என்று பினாங்கு இந்து சங்கத் தலைவர் மா.முனியாண்டி அறிவுறுத்தினார்.
மாற்றம், ஒழுக்கம், சுய சிந்தனை, பொருளாதாரம், ஆன்மீகம்,வாழ்க்கையின் நோக்கம், மகிழ்ச்சி என்ற கூறுகளின் சரியாக நம் சமுதாயம் பயணிக்குமேயனால், நாம் மற்ற சமூகம் போல் மேலோங்கி தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாம், நம் சமூகத்தை, நம் குடும்பத்தை, நம் பிள்ளைகளைக் கட்டொழுங்குமிக்கவர்களாக உருவாக்கி, சரியான தடத்தில் பயணம் செய்ய வைப்பதற்கு குறைந்தபட்ச முயற்சியையாவது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் மூன்றாவது இனமாக வாழ்கின்ற நம் இந்திய சமுதாயம் பொருளாதார ரீதியில் வெற்றி கண்டால், நாம் நம் சமுதாயத்தில் கட்டொழுங்குமிக்க இனமாக வாழ வழிவகுத்துக்கொள்ளலாம்.
இனம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் சமயம் என்ற அடிப்படை கூறுகளின் இந்தியர்கள் பயணித்தால் பொறாமை, தீய சிந்தனை, பழிவாங்கும் எண்ணம், அடுத்தவரை நம்பி வாழும் நிலையில்லாமல் இந்த நாட்டில் நாம் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
மலேசியா எனும் அழகான நாட்டில் நாம் தனிபட்ட முறையில் முன்னேற்றம் அடைய எல்லா பாதைகளும் நமக்கு திறந்துதான் உள்ளன.
இதில், நாம் சிந்திக்கும் சமுதாயமாக இருந்து ஒருவருக்கொருவர் உதவும் எண்ணத்தில், வாழ்க்கைப் பயணத்தை மட்டும் முறையாக மாற்றிக்கொண்டால் சிறப்பாக வாழமுடியும். பிற இனத்தவர்களிடமிருந்து நல்லவற்றைக் கற்றுகொள்வது தவறானதல்ல. ஆனால் நாம் அல்லவா முன்னுதாரணமாக நல்லவற்றைக் கற்றுக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்?
ஆனால், நாம் இன்னும் சண்டை, சச்சரவு, ஒருவரை ஒருவர் அழித்தல் என்று வாழ்ந்து வருவது யாருக்கும் நன்மை விளைவிக்காது என்பதை எண்ணிப்ப்பார்த்து நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் வெறும் கற்பனை வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நிசத்தை உணரவேண்டும். தனக்கென மட்டும் வாழாமல், சமுதாயத்திற்காகவும் தொழில் ரீதியில் தங்களை இணைத்துகொண்டும், வாழ்க்கையில் ஏற்றம் காணவேண்டும். எதிலும் அகலக்கால் வக்காமல் சின்னதாய் தொடங்கிப் பெருக்க வேண்டும்.
இதற்கான எந்த வகையான முயற்சியையும் எடுக்கும் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு, ஆலோசனைகள் வழங்க பினாங்கு இந்து சங்கப் பேரவை தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைவர் முனியாண்டி தனதறிக்கையில் குறிப்பிட்டார்.
செ.குணாளன்