உங்கள் பழைய டயர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். ஒரு காரை நீங்கள் பார்த்தால், எதை கவனிப்பீர்கள்?
எந்த நிறுவனத்தின் கார், காரின் பெயர் ஆகியவற்றுடன், கூடுதலாக வண்ணம் மற்றும் ஏதாவது கூடுதல் வசதிகள் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்பதையும் கவனிப்பீர்கள் என்பது நிச்சயம். மற்ற அனைவரையும் போல், டயர்களை நீங்கள் பெரிதாக கவனிக்க மாட்டீர்கள்.
கார் உள்பட எந்தவொரு வாகனம் என்றாலும் டயர்கள் மிகவும் முக்கியமானவை. டயர்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே நாம் அதன் மீது கவனம் செலுத்துவோம். இல்லாவிட்டால் நம் கவனம் டயர்களுக்கு செல்லாது. ஆனால் ஒரு குழுவினர் தொடர்ச்சியாக டயர்கள் மீது கவனம் செலுத்தி கொண்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தான் அந்த குழுவினர். ஏன் தெரியுமா? அமெரிக்காவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 300 மில்லியன் டயர்கள் அப்புறப்படுத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்படி என்றால் உலகம் முழுவதும் கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தப்படும் டயர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
சரி, அந்த டயர்கள் எல்லாம் எங்குதான் செல்கின்றன? முன்பெல்லாம் பழைய டயர்களை ஏதேனும் ஒரு பெரிய நிலப்பரப்பில் குவித்து வைத்து விடுவார்கள். அல்லது எரித்து விடுவார்கள். இவை இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
டயர்களை எரிப்பது என்பது அபாயகரமான வாயுக்களை வெளியிட்டு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோன்று டயர்கள் எளிதில் மக்காது என்பதால், பெரிய நிலப்பரப்புகளில் அவற்றை குவித்து வைப்பதும் கூட தீமையைதான் ஏற்படுத்தும். அத்துடன் அவற்றை வைப்பதற்கு பெரிய இடவசதி தேவை என்பதும் ஒரு பிரச்னைதான்.
ஆனால் இன்று சுமார் 90 சதவீத பழைய டயர்கள் வெற்றிகரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு விடுகின்றன. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கும் தகவல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 240 மில்லியன் பழைய டயர்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. நீங்கள் புதிய டயர்களை வாங்கும்போது, உங்களிடம் இருந்து பழைய டயர்கள் பெரும்பாலும் சேகரிக்கப்படும்.
பின்னர் அவை மறுசுழற்சிக்கு உட்டுபடுத்தப்படுகின்றன. டயர்கள் மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, வேறு புதிய பொருட்களாக உருவாக்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படும் டயர்களின் மூலம் கிடைக்கும் மெட்டீரியல்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு வித்தியாசமான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதவிர தற்போது டயர்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு, சாலை கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. பழைய டயர்களை மறுசுழற்சி செய்து, சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்கின்ற தொழில்நுட்பம் தற்போது இங்கிலாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் பழைய டயர்கள் சக்தியை உருவாக்கும் மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நிலக்கரியை விட 25 சதவீதம் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் பழைய டயர்களுக்கு இருக்கிறது. ஆனால் இதுவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஒரு சிலர் தங்களது பழைய டயர்களை புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். அதாவது பழைய டயர்களை வர்ணம் தீட்டி, வீட்டு தோட்டங்களை அமைக்கின்றனர். பல வீடுகளில் இந்த அலங்கார தோட்டங்களை நம்மால் தற்போது காண முடியும். இவ்வாறு பல வழிகளில் பழைய டயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.