நியூயார்க்: இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் 3 நிமிடங்களில் 900 பேரை பணி நீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் ‘பெட்டர் டாட் காம்’ என்ற வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தை கூட்டாக துவக்கினார். இந்த வலைதளத்தில் தரகு கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம்.
ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவிலும் வெளிப்படைத் தன்மை இருந்ததால் அந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் விஷால் கார்க் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக 3 நிமிடங்களில் ஊழியர்கள், 900 பேரை திடீரென வேலை நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
மொத்த ஊழியர்களில் 9 சதவீதம் பேர் வேலையிழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு வேலையில் மந்தம், செயல்பாடுகளில் திறமையின்மை, உற்பத்தி திறன் குறைவு ஆகிய காரணங்களை விஷால் கார்க் கூறியுள்ளார். பணி நீக்கம் செய்தோரில் 250 பேர், 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து 8 மணி நேர ஊதியத்தை பெறுவதாக விஷால் கார்க் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் அந்த நிறுவனம் மட்டுமின்றி பணிகளை வழங்கும் வாடிக்கை நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் விஷால் 900 ஊழியர்களை நீக்கியது அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.