போலீஸ்காரருக்கு RM150 லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வங்காளதேசத்து ஆடவருக்கு, RM10,000 அபராதம்!

ஈப்போ, ஜனவரி 25 :

கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 150 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் RM10,000 அபராதம் விதித்தது.

இந்த தீர்ப்பினை வழங்கிய நீதிபதி M. பக்ரி அப்துல் மஜிட், குறித்த ஆடவரான ஹூசைன் முகமட் சாகிப், 31, விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

குற்றப்பத்திரிகையின்படி, குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6ன் கீழ், ஹூசைன் மற்றும் அவரது இரண்டு வங்காளதேச நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தாப்பா மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு RM150 லஞ்சம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மார்ச் 10, 2021 அன்று, நண்பகல் 2.50 மணிக்கு, சுங்காய் டோல் பிளாசாவிலிருந்து வெளியேறும் முன், நாட்டில் இருப்பதற்கு தகுதியான செல்லுபடியாகும் பாஸ் அல்லது அனுமதிச் சீட்டைச் சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த லஞ்சம் வழங்க முன்வந்தார்.

தண்டனைச் சட்டத்தின் 214வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

துணை அரசு வழக்கறிஞர் ராஜா மசியா மன்சோர் இவ்வழக்கை நடத்தினார், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

மாதம் ஒன்றுக்கு RM1,000 வருமானம் கொண்ட ஒரு தொழிற்சாலை தொழிலாளியான ஹூசைன், வங்களாதேசத்தில் தன்னை ஆதரமாக கொண்ட ,இரண்டு குழந்தைகள் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்ற காரணத்திற்காக, தனக்கு நீதிமன்றம் மன்னிப்பு தரவேண்டும் என்று கேட்டபோது, அவர் அழுவதைக் காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here