கோலாலம்பூர், பிப்ரவரி 20 :
கம்போங் பாருவில் உள்ள சலோமா பாலம் அருகே, ஏழு மீட்டர் ஆழமுள்ள வாய்க்காலில் விழுந்த பார்வையற்ற ஒருவரை (OKU) தீயணைப்பு வீரர்கள் இன்று பாதுகாப்பாக மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில், கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையத்திற்கு மாலை 4.27 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
தகவல் கிடைத்ததும் தித்திவாங்சா மற்றும் ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 13 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக, செயல்பாட்டுத் தளபதி ஜி சந்ரசேகரன் தெரிவித்தார்.
மாலை 4.34 மணியளவில் பார்வைக் குறைபாடுள்ள 46 வயதுடைய நபர், ஒரு பெரிய வாய்க்காலில் விழுந்து அங்கிருந்த மேடான இடத்தில் இருந்ததை தமது குழு கண்டது என்றார்.
“உறுப்பினர்கள் உடனடியாக அவரை மீட்கும் பணியைத் தொடங்கி, மாலை 5.06 மணிக்கு அவர் வெற்றிகரமாக அங்கிருந்து மேலே தூக்கி வரப்பட்டார்.
” தோள்கள், கால்கள் மற்றும் கைகளில் சிறிய காயங்கள் கொண்ட பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
மாலை 5.42 மணிக்கு மீட்பு நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றார்.