கோலக்கிராய், பிப்ரவரி 26 :
நேற்று பிற்பகல் கம்போங் கோலக்கிரிஸ், சுங்கை காலாஸ், பெங்கலான் லான் பகுதியில், காணாமல் போன மூத்த குடிமகன் ஆற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட தகவலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட முகமது இஷாக், 70, தனது சிறிய படகினை தேடிப் பார்க்க பெங்கலான் லானுக்குச் செல்ல விரும்புவதாக, தனது மகனிடம் தெரிவித்ததாக கோலக்கிராய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சுசைமி முகமட் தெரிவித்தார்.
இரண்டு மணிநேரம் கடந்தும் அவரது தந்தை வீடு திரும்பாததால், பாதிக்கப்பட்டவரின் மகன் பெங்கலான் லானுக்குச் சென்றதாகவும், தந்தையின் மோட்டார் சைக்கிள் மற்றும் உடைமைகள் ஆற்றங்கரையில் இருப்பதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
“பெங்கலான் லான் பகுதியைச் சுற்றித் தேடியும், அவரது தந்தையைக் காணவில்லை, அவருடைய மகன் தனது தந்தை விழுந்து ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார்.
அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் மகன் நேற்றிரவு 10 மணியளவில் தாபோங் காவல் நிலையத்தில் தனது தந்தை காணாமல் போனது குறித்து புகார் அளித்தார், காணாமல்போனவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிளாந்தான் மண்டலம் 2 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் நூருல் அல்ஃபிஸ்யாஹ்ரின் எம்ஹெட் ஜாக்கி இதுபற்றிக் கூறுகையில், இன்று காலை 8.40 மணிக்கு சம்பவம் குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
“தாபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) 8 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
“இன்று காலை முதல், பெங்கலான் குபோர் BBP நீர் மீட்புக் குழு (PPDA) மற்றும் பெங்கலான் சேபா BBP மற்றும் துப்பறியும் நாய் பிரிவு (K9) ஆகியவற்றுடன் இணைந்து பாதிக்கப்பட்டவரைக் கண்டறிய தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்றும் ஆனால், இதுவரை பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார்.