ஷா ஆலாம், பிப்ரவரி 28 :
நேற்று, இங்குள்ள செக்க்ஷன் U13, செத்தியா ஆலாமிலிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து குதித்து, இறந்ததாக நம்பப்படும் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாள ஆவணம் எதுவும் காணப்படாததால், அவரது சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பஹருடின் மத் தாயிப் கூறினார்.
பாதிக்கப்பட்டவர், கருப்பு டி-சர்ட் மற்றும் அடர் நீல நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார் என நம்பப்படுகிறது.
“முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை, பாதிக்கப்பட்டவர் B பிளாக் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
“இருப்பினும், பாதிக்கப்பட்டவர் எந்த மாடியில் இருந்து குதித்தார் என்பது கண்டறியப்படவில்லை,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் உதவி புலனாய்வு அதிகாரி சார்ஜென்ட் அஹ்சனுல்லா ஆண்டோக்கை 03-55202222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.