ஈப்போ, மார்ச் 25 :
மெர்சிடிஸ் காரின் ஜன்னலில் கண்ணாடிகளுக்கு வெளியே 3 குழந்தைகளை அமர வைத்து, ஆபத்தான முறையில் கார் ஓட்டிய காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் இதுபற்றிக் கூறுகையில் , Inforoadblock என்ற முகநூல் பக்கத்தில் ஒரு நிமிடம் மற்றும் இரண்டு வினாடிகள் கொண்ட காணொளியை கண்டறிந்தோம், அதில் மூன்று குழந்தைகளை அமரவைத்து ஆபத்தான முறையில் வண்டி ஒட்டியதை காட்டியது.
இந்த சம்பவம்,இங்குள்ள ஜாலான் தம்புனில் நடந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம் அடையாளம் காணப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான காவல்துறை அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன் இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 336 மற்றும் பிறரின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (A) இன் படி விசாரணை நடத்தப்படுகிறது.
“இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தகவல் அறிந்தவர்கள், மூத்த புலனாய்வு அதிகாரி, துணை கண்காணிப்பாளர் யாப் சியூ செங்கை 012-9093362 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.