இருதய நோய்களுக்கான நவீன சிகிச்சைகள்-சிவிஎஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டாக்டர் மு.தமிழ்ச்செல்வத்தின் பிரத்தியேக சிறப்பு நேர்காணல்

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் நியூ சென்ட்ரல் வளாகத்தில் இயங்கி வரும் இருதய நோய்களுக்கான நவீன சிகிச்சைகள் என்ன?, இருதய நோய்கள் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் என்ன?, முன்னெச்சரிக்கை உடல்நலப் பரிசோதனைகள் என்ன?

சிவிஎஸ் மருத்துவமனையின் இருதய நோய்களுக்கான மருத்துவ நிபுணர் டாக்டர் மு.தமிழ்ச்செல்வம், மக்கள் ஓசைக்கு வழங்கிய பிரத்தியேக சிறப்பு நேர்காணலில் விவரித்தார்.

இருதயம் தொடர்பான நோய்களுக்கு தங்களின் மருத்துவமனையில் வழங்கப்படும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விவரித்தார். ஆகக் கடைசியாக மருத்துவ உலகில் இருதய நோய்களுக்கென கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் இருதய நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.

இளம் வயதினர், இருதய நோய் வரக்கூடிய அபாயத்தில் இருக்கும் நடுத்தர வயதினர் – மருத்துவர்களை நாடாமல் தாங்களாகவே எடுத்துக் கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உணவு, உடற்பயிற்சி, நடைமுறைகள் குறித்தும் தமிழ்ச்செல்வம் விளக்கினார். அனைவரும் காப்புறுதி அடிப்படையிலான மருத்துவ சிகிச்சை அட்டை ஒன்றை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் விவரித்தார்.

இனி அவர் கூறிய தகவல்களின் சில முக்கிய அம்சங்கள் :

பல்வேறு நிபுணத்துவங்கள் கொண்ட இருதய மருத்துவ நிபுணர்களையும் ஒரே இடத்தில் கொண்டிருக்கும் மருத்துவமனை எங்களின் சிவிஎஸ் மருத்துவமனையாகும். மேலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கும் (Gastro) தனிப்பிரிவு ஒன்றை நாங்கள் தோற்று வித்திருக்கிறோம். இதுபோன்ற வசதிகளில் எந்த மருத்துவமனைக்கும் குறைவில்லாத மருத்துவ வசதிகளையும் நிபுணத்துவ மருத்துவர்களையும் நாங்கள் கொண்டிருக்கிறோம்.பலமுனைப் பயன்பாடு கொண்ட மருத்துவப் பரிசோதனைக் கூடங்களையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இணையாக தேசிய இருதயக்கழக மருத்துவமனை (ஐஜேஎன்) மட்டுமே இத்தகயை வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஓராண்டில் ஏன்ஜியோ பிளாஸ்ட் எனப்படும் சிகிச்சைகளை 800 முதல் 900 வரை எண்ணிக்கைளில் செய்திருக்கிறோம்.

மருத்துவப் பணியாளர்களும் ஒரு மருத்துவமனைக்கு முக்கியம்

எங்களின் மருத்துவமனை குறுகிய காலத்தில் புகழ்பெற்றதற்கு சிறந்த சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மட்டும் காரணமல்ல. நிறைவான சம்பளத்தில் திறன்வாய்ந்த சிறந்த மருத்துவப் பணியாளர்களை பணிகளில் அமர்த்தி இருக்கிறோம் என்பதும் இன்னொரு காரணமாகும். இதனால், ஒரு நோயாளியின் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் சிறந்த மருத்துவக் கவனிப்பையும் அவர்களுக்கான உதவிகளையும் இந்த மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு எங்களால் வழங்க முடிகிறது.

மருத்துவ உலகை மாற்றி அமைக்கப்போகும் டெலி மெடிசன்

மருத்துவ உலகில் சமீப காலத்தில் புரட்சிகரமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுவது டெலி மெடிசன் எனப்படும் தொலைதூர மருத்துவச் சிகிச்சை முறையாகும். நவீன சக்தி வாய்ந்த கைப்பேசிகளின் வழியாகவும் கனிணிகளின் வழியாகவும் இணையத் தொடர்பு மூலம் இந்த சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் இந்த டெலி மெடிசன் சிகிச்சை மூலம் நிபுணத்துவம் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு சுலபமாகப் பரிமாறப்படும். சாதாரண ஏழை மக்கள்கூட இதனால் பயன்பெறலாம்.

5ஜி தொழில்நுட்பப் புரட்சி

மேற்கண்ட டெலி மெடிசன் போன்ற புதிய நவீன சிகிச்சை முறைகளின் செயலாக்கத்திற்கு 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அதிவிரைவு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.இந்த 5ஜி – டெலி மெடிசன் – இணைந்த மருத்துவத் தொழில்நுட்பம் மருத்துவ உலகில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் நிகழ்த்தவிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நோயாளியைக் கொண்டு வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு – அந்த நோயாளி மருத்துவமனை வந்து சேரும் வழியிலேயே – அவருக்குரிய சிகிச்சைகள் வழங்கப்படும். இதனை 5ஜி தொழில்நுட்பம் சாத்தியமாக்கும்.

ரொபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன் தொழில்நுட்பம்

மருத்துவ உலகில் அறுவைச் சிகிச்சைகளில் அடுத்து ஏற்படப்போகும் மற்றொரு மாபெரும் புரட்சி ரொபோட்டிக்ஸ் எனப்படும் எந்திர மனிதனைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளாகும். சில சிகிச்சை முறைகளில் இந்த முறை தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகி விட்டது. உதாரணமாக, புரோஸ்டேட் கேன்சர் எனும் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்கு இப்போதெல்லாம் எந்திர மனிதனைக் கொண்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
காரணம் இதுபோன்ற சிகிச்சைகளில் ஒரு மருத்துவரின் கரங்கள் குறிப்பிட்ட சில உடல் பாகங்களைச் சென்றடைய முடியாது. இதுபோன்ற சிகிச்சைகளுக்கு எந்திர மனிதனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதே பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள்..

உங்களுக்குச் சிகிச்சை என்று வந்தாலோ ஏதாவது நோய் கண்டாலோ மருத்துவரைச் சென்று காணும் அதே வேளையில் இன்னொரு மருத்துவரை அணுகி இரண்டாவது ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள். ஒரு மருத்துவ சிகிச்சையையும் மருந்துகள் பெறும் ஆலோசனையையும் பெறுவதற்கு முன்னர் இரண்டாவது ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். இதன் மூலம் உங்கள் நோய் குறித்த தெளிவை நீங்கள் பெற முடியும்.

70 வயதான ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவது தப்பில்லை. ஆனால் இளம் வயதிலேயே ஒருவர் மருத்துவமனைக்கு வருவது முறையல்ல. இதற்குப் பல பின்னணிக் காரணங்கள் இருக்கின்றன. சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் நீரிழிவு நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் என்பதெல்லாம் நாம் அதிகம் காணாத நோய்கள். இதற்குக் காரணம் நாம் அதிக அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வதுதான். மேற்கத்திய உணவு முறை நமக்கு அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் நமது உணவு கலாச்சாரம் முற்றாக மாறி விட்டது. மேலும் நவீன யுகக் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதில்லை. வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி முன்னாலும் கம்ப்யூட்டர், கைப்பேசி விளையாட்டுகளிலும் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

அதிகளவில் விளையாட்டுகளும் உடற்பயிற்சிகளும் அவர்களுக்கு இல்லை. பெற்றோரும் இது குறித்து அக்கறை கொள்வதில்லை. எனவே 40 வயதில் ஒரு மனிதருக்கு மாரடைப்பு வருகிறது என்றால் அதற்குக் காரணம் இளம் வயதிலேயே அதற்கான பாதிப்புகள், அதற்கான காரணங்கள் உருவாக்கப்படுகின்றன.எனவே குழந்தைகளை அவர்களின் எதிர்கால நலன்களுக்காக நாம் அவர்களுக்கு இளம் வயதிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுத்தர வேண்டும். ஏதாவது ஒரு விளையாட்டிலோ உடற்பயிற்சியிலோ ஈடுபடச் செய்ய வேண்டும். அவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள் என்பதற்காக அதிகக் கொழுப்புச் சத்துள்ள மேற்கத்திய பாணி துரித உணவுகளை நாம் வாங்கிக் கொடுக்கக்கூடாது. இதனால் அவர்களுக்கு எதிர்காலத்தில் இருதய நோய்கள் வருவது ஒத்திப் போடப்படலாம்.

உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

நாம் எத்தகைய வயதினராக இருந்தாலும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியம். அதற்கான செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் அனைவரும் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நமக்கு நோய் வராது என்ற நம்பிக்கை இருப்பது நல்லதுதான். ஆனால் அதற்கென உடல் பரிசோதனையைத் தவிர்த்து விடக்கூடாது.
தனியார் மருத்துவமனைகளில் சிறந்த – உடனடி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பெறுவதற்கு பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. அரசாங்க மருத்துவமனைகளில் உடனடி சிகிச்சைகள் வழங்குவதற்கு நிறைய பேர் காத்திருப்பதால் காலத்தாமதம் ஏற்படுகிறது.

எனவே இன்றையக் காலகட்டத்தில் மட்டுமல்ல – எதிர்காலத்திலும் பெருகி வரும் மருத்துவக் கட்டணங்களைச் சமாளிக்க ஒவ்வொருவரும் தனக்கென காப்புறுதி அடிப்படையிலான மருத்துவப் பாதுகாப்பு அட்டை (மெடிக்கல் கார்ட்) ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கான சிகிச்சைகள் பெறுவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். முதியவர்களுக்கு இத்தகைய அட்டைகளைப் பெறுவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இளைஞர்கள் இதுபோன்ற காப்புறுதி அட்டைகளைக் கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த விரும்புகின்றேன்.

இருதய நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

முதலாவதாக அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நோய்களை அடையாளம் காண்பதற்கும் உடல் பரிசோதனைகள் உதவும். அப்படித் தெரிந்து கொள்ளும் போது அதற்கேற்ற பொருத்தமான சிகிச்சை களையும் பெற முடியும்.

இரண்டாவதாக, உங்கள் உடல் நலத்தில் உண்மையிலேயே அக்கறை இருந்தால் புகைப் பிடிப்பதை முதலில் நிறுத்துங்கள்.மூன்றாவது, சரியான அளவான உணவு முறைகள். நீங்கள் விரும்பியவற்றை அளவோடு சாப்பிடுங்கள்.

நான்காவதாக, உடல் பருமனை எப்படியாவது முயற்சி செய்து குறைக்கப் பாருங்கள். இதற்குக் கடுமையான முயற்சி தேவை. உடனடியாக அதிகளவில் எடை குறைக்க எண்ணாமல் கட்டங்கட்டமாக ஓரிரு கிலோவாக உடல் எடையைக் குறைக்க முற்படுங்கள். ஐந்தாவதாக, உங்களிடம் காணப்படும் கெட்டப் பழக்கங்கள் என்ன என்பதை அடையாளம் கண்டு அவற்றைக் கைவிடுங்கள் அல்லது நிறுத்துங்கள். ஆறாவதாக, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். யோகாசனம் செய்வது நல்லது.

இருதய நோய் உட்பட பல நோய்களுக்கு மூலாதாரமாக அடையாளம் காணப்பட்டிருப்பது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமாகும். எனவே எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படுவதை விடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள். அதைப் பின்பற்றுங்கள். நீங்கள் நோயாளிகளாக, மருத்துவர்களான எங்களிடம் வருவதை உண்மையிலேயே நாங்கள் விரும்பவில்லை. மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றி நடந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் எங்களைத் தேடி வர வேண்டிய நிலைமை இருக்காது.

ஒரு காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு நிறைய முக்கியத்துவம் வழங்கப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி காண்பதை நான் கண்டிருக்கிறேன்.

ஆனால் இப்போது ஏனோ அத்தகைய மனப்பான்மை குறைந்திருப்பதாக எனக்குப் படுகிறது. எனவே தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களை அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்துங்கள். ஆர்வம் கொள்ளச் செய்யுங்கள். குறிப்பாக குழுப் போட்டிகளில் பங்கேற்பதால் அவர்களுக்கு ஒரு குழுவாக எப்படிச் செயல்படுவது, இயங்குவது என்ற மனப்பான்மையும் உருவாகும். எதிர்காலத்தில் அவர்களின் பணிகளில் அவர்களுக்கு இத்தகைய மனப்பான்மை உதவும்.

மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். சிறப்பான உடல்நலத்தைப் பெற்று ஆரோக்கியத்தோடு நிறைவான வாழ்க்கை வாழுங்கள் என்ற அறிவுறுத்தலோடு மக்கள் ஓசைக்கான நேர்காணலை நிறைவு செய்தார் டாக்டர் தமிழ்ச் செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here