உக்ரைன் புகையிரத நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் பலி!

கீவ், ஏப்ரல் 9 :

இன்று 45-வது நாளாக தொடர்கிறது உக்ரைன்- ரஷ்யா போர். போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையில், உக்ரைனின் டான்பாஸ் மாகாணம் கர்மொடொர்ஸ்க் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் டான்பாஸ் மாகாணத்தை விட்டு ரெயில் மூலம் வெளியேற நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த ரெயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், ரெயில் நிலையத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கர்மொடொர்ஸ்க் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக அந்த மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்தபோது ரெயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு இருந்ததாக கவர்னர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ரெயில் நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here