சிலாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் லோரி திருட்டில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 10 பேர் கைது!

சுங்கை பூலோ, ஏப்ரல் 15:

சிலாங்கூர் காவல்துறையால் ஏப்ரல் 5 முதல் 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படட நடவடிக்கையில், சிலாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் லோரிகளைத் திருடி, வாகன உதிரிப்பாகங்களாக விற்கும் ஒரு கும்பலின் மூளையாக செயல்பட்ட ஒரு பட்டறை உரிமையாளர் உட்பட 10 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர், தோங்காங் பேச்சா மற்றும் ஜாலான் குளுவாங், பத்து பாகாட், ஜோகூர் ஆகிய இடங்களை நோக்கிச் செல்லும் சாலையிலுள்ள செனாவாங் டோல் பிளாசாவில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகள் மூலம், ஒரு பெண் உட்பட 28 முதல் 60 வயதுடைய 10 சந்தேக நபர்களைக் கைது செய்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமட் தெரிவித்தார்.

“பிப்ரவரி 23 அன்று ஷா ஆலமில் உள்ள U5 பிரிவில் நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்தை காணவில்லை என்று 63 வயதான லோரி டிரைவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது.

தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், லோரி திருட்டுக் கும்பலின் மூளையாக செயல்பட்ட 47 வயது பட்டறை உரிமையாளர் மற்றும் பங்களாதேஷ் நபர் உட்பட ஒன்பது பேரை நாங்கள் கைது செய்தோம் என்று சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், அவர்களிடமிருந்து நல்ல நிலையில் இருந்த ஒரு லோரியையும், 20 பழுதடைந்த நிலையில் இருந்த லோரிகள் , ஒன்பது என்ஜின்கள் மற்றும் 11 லோரி உதிரிபாகங்கள் என மொத்தம் RM605,000 மதிப்புடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.

“கடந்த ஆண்டு முதல் செயல்படும் இந்தக் குழுவின் செயல்பாடு, சிலாங்கூரைச் சுற்றி நிறுத்தப்படும் லோரிகளை குறிவைப்பதாகும்.

“ஒவ்வொரு சந்தேக நபருக்கும் திருடுவது, லோரியை பட்டறைக்கு அனுப்புவது மற்றும் வாகன உதிரிபாகங்களை பிரிப்பது உள்ளிட்ட பங்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.

கும்பலால் திருடப்பட்ட லோரி, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட்ட ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

“சந்தேக நபர் திருடப்பட்ட லோரியின் அளவு மற்றும் நிலையைப் பொறுத்து ஒவ்வொரு டெலிவரிக்கும் RM3,000 முதல் RM5,000 வரை பெறுகிறார்” என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறினார்.

முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் உட்பட நான்கு சந்தேக நபர்களிடம் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அர்ஜூனைடி கூறினார்.

“வாகனத்தைத் திருடியதற்காக தண்டனைச் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் மேலும் விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதன் மூலம், இந்த மாவட்டத்தில் பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு லோரி திருட்டு வழக்குகளை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here