டெங்கில், மே 29 :
நேற்று இரவு, இங்குள்ள கம்போங் ஜெண்டராம் ஹிலீரில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 பேர் வசித்து வந்த ஒற்றை மாடி கொண்ட 9 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பில், தீயணைப்புப் படையினருக்கு நேற்று இரவு 9.52 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், பின்னர் இரவு 10 மணிக்கு அவரது துறையினர் அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, ஒவ்வொன்றும் 15 × 40 சதுர அடி அளவுள்ள 9 வீடுகள் தீயில் எரிந்தன, இது A வகுப்பு, 1-மாடி கொண்ட வீடுகளாகும்.
“அதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினரால் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது, மொத்த சேதம் 90 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை,” என அவர் கூறினார்.
இரவு 10.18 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தீயணைப்புத் துறையினர் செய்த சீரமைப்புப் பணிகளால் இரவு 11 மணிக்கு தீ முற்றாக அணைக்கப்பட்டதாகவும் நோராஸாம் கூறினார்.
டெங்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், BBP சைபர்ஜெயா, BBP கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA ), BBP பாங்கி, BBP செர்டாங் மற்றும் BBP காஜாங் ஆகியவைஆபரேஷன் கமாண்டர், PBK II (KUP) முஹமட் ஷகிரின் தலைமையில் நடந்த தீ அணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மேலும் கூறினார்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.