பெந்தோங், மே 30 :
இங்குள்ள ஜண்டா பைக்கில், மே 21ஆம் தேதி, அவரது வீட்டைச் சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா மரங்கள் பயிரிட்டது தொடர்பாக, கைது செய்யப்பட்ட முன்னாள் மலேசிய தூதரக அதிகாரியின் மகனுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவு மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117ன் கீழ், 58 வயதுடைய சந்தேக நபருக்கான இரண்டாவது தடுப்புக் காவல் விண்ணப்பம் செய்யப்பட்டது, என்று பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சைஹாம் முகமட் கஹர் தெரிவித்தார்.
“சந்தேக நபருக்கு எதிரான இரண்டாவது விளக்கமறியல் விண்ணப்பம் நாளை முதல் ஜூன் 4 வரை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 78 வயதான முன்னாள் மலேசிய தூதருக்கு எதிரான இரண்டாவது விளக்கமறியலை நீட்டிக்க போலீஸ் தரப்பினால் செய்யப்பட்ட விண்ணப்பம், பெந்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, டத்தோ அந்தஸ்துள்ள முன்னாள் மலேசிய தூதர், மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டைச் சுற்றி கஞ்சா நட்டதாகக் கூறி, மே 21 அன்று கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
102 கஞ்சா மரங்களில், 60 கஞ்சா மரங்கள் நடப்பட்டதாகவும், 8 கஞ்சா மரங்கள் கூடாரத்தில் இருந்ததாகவும், மேலும் 34 இளம் கஞ்சா மரங்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நாட்டின் போதைப்பொருள் வரலாற்றில் மிக அதிகளவில் கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வழக்கிலேயாகும் என்றார்.















