போர்ட்டிக்சன், ஜூன் 7 :
சுங்கை லிங்கியில் உவர் நீர் முதலைகள் சரணாலயத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட ஆய்வுக்காக நெகிரி செம்பிலான் அரசாங்கம் கிட்டத்தட்ட RM200,000 ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில சுற்றுலா வாரியம் மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை மூலம் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் கூறினார்.
இந்த ஒதுக்கீட்டில் ஊர்வன இனப்பெருக்கம் மற்றும் அவற்றை பாதுகாக்கும் நோக்கத்திற்காக தற்போதுள்ள முதலைகளின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நடவடிக்கை ஒரே நேரத்தில் போர்ட்டிக்சனின் வளர்ச்சியிலும், நெகிரி செம்பிலானின் பொருளாதார வளர்ச்சியிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
“சரணாலய சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு, குறிப்பாக முதலை இனங்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு, சுற்றுலாத் துறையை மேலும் ஊக்குவிப்பதோடு, பல்லுயிர் நிலைப்புத்தன்மையின் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.
“எனவே, உவர் நீர் முதலையின் பாதுகாப்பு விரிவான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இந்த இனம் இயற்கையாக ஆற்று சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெரும் பங்களிக்கிறது.
இன்று இங்குள்ள சரணாலயத்திற்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வாழ்விட இழப்பு காரணமாக முதலைகள் தொடர்ந்து அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை, இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்றார்.
3.408 ஏக்கர் சரணாலயம் மே 4, 2021 அன்று உவர் நீர் முதலைகள் சரணாலயமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது என்றார்.
இந்த உவர் நீர் முதலை அச்சுறுத்தும் வனவிலங்கு இனம் என்றும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010 (சட்டம் 716)ன் கீழ் முழுமையாக அவை பாதுகாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.