கோலாலம்பூர், ஜூன் 25 :
ஜூன் 18 ஆம் தேதி, இங்குள்ள தாமான் சாலாக் செலாத்தானில் உள்ள ஒரு கோண்டோமினியம் பிரிவில் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு சொந்தமான தோயோத்தா எஸ்டிமா பல்நோக்கு வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறுகையில், கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் வாகனம் இருந்த இடத்தைச் சுற்றி ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
“பரிசோதனையின் விளைவாக, எம்பிவியின் ஓட்டுநர் இருக்கையின் கீழ் ஸ்மித் & வெஸ்ஸன் வகை பிஸ்டல் கொண்ட ஒரு பையைக் கண்டோம்.
“மேலும், புல்லட் சிலிண்டரில் (அறை) ஆறு பயன்படுத்தும் நிலையிலிருந்த தோட்டாக்களையும், ஏழு பயன்படுத்தும் நிலையிலிருந்த தோட்டாக்கள் அடங்கிய ஒரு பண உறையையும் கண்டுபிடித்தோம்”.
“உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துப்பாக்கி இறந்தவருக்கு (சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு) சொந்தமானது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தக் குழுவின் மீதமுள்ள உறுப்பினர்கள் மற்றும் துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கான தொடர் விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இவ்விஷயம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் “019-9984444 குற்றப் புலனாய்வு நடவடிக்கை அறைக்கு 03-21460685 என்ற எண்ணில் விசாரணை அதிகாரியின் உதவி கண்காணிப்பாளர் முகமட் ஹஸ்னி ஹுசினைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-21159999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் ” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜூன் 18 அன்று,தாமான் சாலாக் செலாத்தானில் உள்ள ஒரு கோண்டோமினியம் பிரிவில் போலீசார் சோதனை நடத்தியதில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.