மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த அனிதாவின் தலையில் தேங்காய் விழுந்தத்தில், அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

பாலிக் பூலாவ், ஜூன் 27 :

இங்குள்ள ஜாலான் தெலுக் கும்பார் அருகே, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணஞ்செய்த பெண்ணின் தலை மீது கூடைப்பந்து அளவிலான தேங்காய் விழுந்ததில், அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை, தெலுக் கும்பாரில் இருந்து ஜார்ஜ் டவுன் நோக்கிச் செல்லும் சாலை வழியாக அவர் மோட்டார் சைக்கிள் சென்றபோது, ​​தேங்காய் அவரின் தலையில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான 28 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மோட்டார் சைக்கிள் நகர்ந்து கொண்டிருந்த போது தேங்காய் விழுந்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வண்டியை கட்டுப்படுத்தி சாலையோரம் நிறுத்தியதையும், பல வழிப்போக்கர்கள் பாதிக்கப்பட்டவருக்கு உதவியதையும், மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக செல்லும்படி எச்சரிக்க முயற்சிப்பதை வீடியோவில் காணலாம்.

பாயான் லெபாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மகாதீர் அஜீஸ், தனது முகநூல் பதிவில், பாதிக்கப்பட்டவருக்கு தான் அனுதாபம் தெரிவிப்பதாகவும், அவர் திருமதி. அனிதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,  பாதிக்கப்பட்டவர் தனது தொகுதியில் உள்ள தாமான் எமாஸில் வசிக்கிறார் என்றார்.

“எனக்கு தகவல் கிடைத்ததும் நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட முகவர்களிடம் கோரிக்கை விடுத்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

சாலையோரத்தில் உள்ள பெரும்பாலான தென்னை மரங்கள் தனியார் உரிமையாளர்களுக்கு சொந்தமானவை என்றும், சம்பவத்திற்கு முன்னதாக வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாகவும் அஸ்ருல் கூறினார்.

மேலும், தற்போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவரின் பிள்ளைகளையும் தான் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here